`நாடாளுமன்றத்தைத் தென்னிந்தியாவுக்கு மாற்றுங்கள்!’ - நவநீதகிருஷ்ணன் வைத்த பகீர் கோரிக்கை! | Shift Parliament Sessions to South; AIADMK MP Navaneethakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (29/12/2017)

கடைசி தொடர்பு:15:05 (29/12/2017)

`நாடாளுமன்றத்தைத் தென்னிந்தியாவுக்கு மாற்றுங்கள்!’ - நவநீதகிருஷ்ணன் வைத்த பகீர் கோரிக்கை!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தென்னிந்தியாவுக்கு மாற்றுமாறு அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்.

நவநீதகிருஷ்ணன்


நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர், “தலைநகர் டெல்லி மிகவும் மாசடைந்துள்ளது. இதனால், இங்கு வசிப்பவர்கள் ஒருவித பயத்துடன் வாழ்கிறார்கள். இப்படியே போனால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக டெல்லி மாறிவிடும்.

 navaneethakrishnan
 

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 48 ஏ-வின்படி, மாசுபாட்டைத் தடுத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தி, வனங்களையும் வனச்சூழலையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இதை உறுதி செய்திருக்கிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தென்னிந்திய நகரங்களில் ஒன்றுக்கு மாற்ற வேண்டும். இதன்மூலம் நமது வட இந்திய நண்பர்கள் மாசுபாடற்ற சூழலை அனுபவிக்க இயலும். அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான கூட்டத்தொடராக அமையவும் இது வழிவகுக்கும். நாக்பூர், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ஏதேனும் ஒரு கூட்டத்தொடரை நடத்துவது தேசிய ஒருமைபாட்டுக்கும் நன்மை பயக்கும்” என்றார். 

உச்ச நீதிமன்றத்தை நாக்பூர் நகருக்கு மாற்ற வேண்டுமென்று அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் கோரிக்கை வைத்ததையும் நவநீதகிருஷ்ணன் நினைவுகூர்ந்தார். இந்த விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், “மாசுபாடு தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. விஞ்ஞானம்தான் உண்மையான பதிலை அளிக்க வேண்டும்” என்றார்.