வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (29/12/2017)

கடைசி தொடர்பு:17:48 (29/12/2017)

மும்பை வணிக வளாகத் தீ விபத்தில் நடந்தது என்ன? - இளம்பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டம் துயரமாக மாறிய சோகம்!

தீவிபத்து

மும்பை கமலா மில்ஸ் வணிக வளாகத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த வணிக வளாகத்தில் தொழில்நிறுவனங்கள், கடைகள், உயர்தர ரெஸ்டாரன்ட்கள், ஹோட்டல்கள், பப்கள் அமைந்திருக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டபோது, ஏராளமானவர்கள் வணிக வளாகத்தில் இருந்தனர். அவர்களில் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். கரும்புகை எழுந்ததால் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 19-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பிவிட்டனர். 

Kushboo



வணிக வளாகத்தில் இருந்த ஒரு ரெஸ்டாரன்டில் முதலில் தீப்பிடித்துள்ளது. பின்னர், அருகில் இருந்த பப் மற்றும் கடைகளுக்குத் தீ பரவியுள்ளது. அந்த ரெஸ்டாரன்டில் குஷ்பு பன்சாலி (28) என்ற பெண் தன் கணவருடன் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தார். நள்ளிரவைத் தாண்டியும் கொண்டாட்டம் நீடித்தது. இந்நிகழ்ச்சியில் அவருடைய தோழியர்கள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது நேரம் இரவு 12.30 மணி. தீப்பிடித்ததும் பலர் தப்பிக்கும் நோக்கில் கழிவறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், அவர்களில் பலர் அங்கேயே உயிர்விட்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது. பிறந்தநாள் கொண்டாடிய குஷ்பு பன்சாலியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இதை அவருடைய உறவினர்  ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார். தீ விபத்து நிகழ்ந்தபோது பன்சாலியும் தன் தோழியுடன் பெண்கள் கழிவறையில் தஞ்சமடைந்தார். புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்துள்ளனர். ஆக, பிறந்த நாள் கொண்டாட்டம் அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் துயரமான நிகழ்வாக மாறி இருக்கிறது. 

தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மஹாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்து இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தினார்கள்.