வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (01/01/2018)

கடைசி தொடர்பு:10:31 (01/01/2018)

திடீர் பயணம் வேண்டாம்! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அறிவுறுத்தல்

'மாநில முதல்வர்கள், மற்ற மாநிலங்களுக்கு திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 


இது தொடர்பாக, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ மாநில முதல்வர்கள் மற்ற மாநிலங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் ஏற்படும். இதனால், ஒரு மாநிலத்துக்குச் செல்லும்போது, அம்மாநில அரசுக்கு உரிய முறையில் தகவல் தெரிவித்துவிட்டு அம்மாநிலங்களுக்கு மற்ற மாநில முதல்வர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். மேலும், தங்களின் பயணத்திட்டம்குறித்த முழு விவரத்தையும் தெரிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டே பயணம் மேற்கொள்ள வேண்டும்.  மாநில முதல்வர்களுக்கு இஸட் அல்லது இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. இதனால், ஒரு மாநிலத்துக்குச் செல்லும் முதலமைச்சருக்கு, உரிய பாதுகாப்பு வழங்கவேண்டியது அந்தந்த மாநிலங்களின் கடமையாகும். முன்னறிவிப்பின்றி திடீர் பயணம் மேற்கொண்டால், இதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குறிப்பிட்ட மாநிலங்களுக்குச் செல்லும் முன், முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.