வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (01/01/2018)

கடைசி தொடர்பு:10:26 (01/01/2018)

கடும் பனிமூட்டம் - டெல்லி விமான நிலையச் செயல்பாடுகள் ரத்து!

கடும் பனிப்பொழிவு காரணமாக, டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் செயல்பாடுகள் முடங்கின. 


டெல்லி விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று முதலே கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. அருகிலுள்ள வாகனங்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அடர்த்தியாக இருந்ததால், நேற்று மட்டும் 150 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. 50 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. 20 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. இந்த நிலையில், இன்றும் காலை முதலே கடும் பனிமூட்டம் நிலவுவதால், விமானங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன. விமான ஓடுபாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருள்கள்கூட தெரியாத நிலை இருக்கிறது. விமானங்கள் தரையிறங்கவும் பறக்கவும், குறைந்தது 125 மீட்டர் அளவுக்கு தெளிவாகப் பார்க்கும் நிலை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், காலை 7.30 மணி முதல் 11.05 மணி வரை எந்த விமானமும் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க அல்லது பறக்க இயலாத சூழல் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.