கோழைத்தனமான தாக்குதல்! புலவாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம் | Cowardly attack by terrorists: HM Rajnath condemns Pulawama attack

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (01/01/2018)

கடைசி தொடர்பு:10:23 (01/01/2018)

கோழைத்தனமான தாக்குதல்! புலவாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

'ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் உள்ள சி.ஆர்.பி.எஃப் படைத்தளத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது' என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்


புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் செயல்பட்டுவரும் சி.ஆர்.பி.எப் பயிற்சி மையத்தின்மீது தீவிரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கினர். தீவிரவாதத் தாக்குதலுக்கு, சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களும் பதிலடிகொடுத்தனர். பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில், சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ‘புலவாமா தாக்குதல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல். நமது வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர்களின் தியாகம் நிச்சயம் வீண் போகாது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்’ என்றார்.