வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (02/01/2018)

கடைசி தொடர்பு:08:49 (02/01/2018)

பிரேசிலில் இருந்து கேரளாவுக்கு ரூ. 25 கோடி மதிப்பிலான கோகைன் கடத்தல்! பெண் கைது

கொச்சி விமான நிலையத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதைப் பொருளைக் கொண்டுவந்த பெண்ணை கைதுசெய்த தேசிய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவினர், அதனைப் பறிமுதல் செய்தனர். 

விமானத்தில் போதைப் பொருள்

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிரேசில் நாட்டின் சவோ பவுலோ நகரில் இருந்து மஸ்கட் வழியாக கொச்சி வந்த விமானத்தில் ஒரு பெண் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான வகையில் பேசியதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.

அதனால் அவரது பொருள்களை சோதனையிட்டனர். அப்போது அவரது பையில் சுமார் 5 கிலோ எடையுள்ள கோகைன் என்ற போதைப் பொருள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர். அதனால் அவரை கைதுசெய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது பெயர் ஜோஸ்னா என்பதும் பிரேசிலைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்தப் பெண்ணிடம் பிரேசிலைச் சேர்ந்த சிலர் பையைக் கொடுத்து அனுப்பியதாகவும், கொச்சி சென்று சேர்ந்ததும் அதனைப் பெற்றுக்கொள்ள உரிய நபர் வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. 

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணியை கண்காணித்தபடியே விமான நிலையத்தில் அவரை இருக்கச் செய்தும், யாரும் அவரைத் தொடர்புகொள்ளவோ, அவரிடம் இருந்து அந்தப் பொருளைப் பெற்றுச் செல்லவோ வரவில்லை. அதனால் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிடிபட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு 25 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். கொச்சி விமான நிலையத்தில் இவ்வளவு அதிகமான மதிப்பு கொண்ட போதைப் பொருள் பிடிபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.