தலித்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை!  வன்முறை பலி குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற தலித்களின் நிகழ்வில் மோதல் வெடித்ததில் ஒருவர் பலியானார். இதுகுறித்து சி.ஐ.டி விசாரணைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பை

1818-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிராவை ஆண்ட பேஷ்வா அரச பரம்பரைக்கு எதிரான போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். புனே அருகே நடந்த  இந்தப் போரில் தலித்கள் ஆங்கிலேயப் படைக்கு உதவி செய்தனர். இந்தப் போரின் நினைவாக அந்தப் பகுதியில் நினைவுத்தூண் எழுப்பப்பட்டது. இந்தப் போரை 'சாதிக்கு எதிரான போர் ' என்று அம்பேத்கர் வர்ணித்தார். அதன்பிறகு, ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி தலித் மக்கள் நினைவுத்தூண் அருகே இந்தப் போரின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். 

இந்தப் போர் நடந்து இந்த ஆண்டுடன் 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆகவே, இதை சிறப்பாக நினைவுகூர தலித் மக்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆங்கிலேயர் வெற்றி பெற்ற போரைக் கொண்டாடுவது தேச விரோதம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர் சிலர்.

இந்நிலையில், நேற்று போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் புனே நோக்கி சென்று கொண்டிருந்த தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாக்குதலைக் கண்டித்து மும்பையில் இன்று தலித் இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தால் மும்பை ஸ்தம்பித்தது.

மும்பை

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மகாராஷ்டிர அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அத்துடன் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி நீதி விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!