''நான் மட்டுமே ஹீரோ இல்லை!'' - எட்டு உயிர்களைக் காப்பாற்றிய மும்பை போலீஸ்

மும்பை கமலா மில் காம்ப்ளக்ஸில் நடந்த தீ விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புத்தாண்டுக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. கமலா மில்ஸ் வணிக வளாகத்தில் இருந்த மோஜோ (Mojo) மற்றும் ஒன் அபவ் (1Above) என்ற இரண்டு ஹோட்டல்களில், முதலில் ஒன் அபவ் ஹோட்டலில்தான் தீ பிடித்தது. பின், அருகில் இருந்த மோஜோ ஹோட்டலுக்கும் தீ பரவியுள்ளது. தீ விபத்தின்போது, கட்டடத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருந்தனர். பிறந்த நாள் பார்ட்டி வழங்கிய குஷ்பூ பன்சாலி என்ற 29 வயது பெண்ணும் இறந்தார். மேலும், 11 பெண்கள் தீயில் சிக்கிப் பலியாகினர். பெரும்பாலோனார் பெண்கள் கழிவறையில்தான் கரிக்கட்டையாகிக் கிடந்துள்ளனர். ஹோட்டலில் தீப்பிடித்ததும் பதறியபடி பலரும் கழிவறையை நோக்கி ஓடியிருக்கலாம், அங்கே, ஏற்பட்ட நெரிசலில் அவர்கள் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 

8 உயிர்களைக் காப்பாற்றிய போலீஸ்

Pic Courtesy: NDTV

 தீயணைப்புத்துறை, போலீஸாரின் மின்னல் வேக நடவடிக்கையால் உயிரிழப்பு கணிசமாகக் குறைந்தது. மீட்புப் பணியின்போது, போலீஸ்காரர் ஒருவர் இளம்பெண்ணைத் தோளில் போட்டுக்கொண்டு, தீப்பிடித்த கட்டடத்தில் இருந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. இக்கட்டான நிலையில் துணிச்சலாகச் செயல்பட்ட போலீஸ்காரர் சுதர்ஷன் சிவாஜி ஷின்டே, ஒரேநாளில் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துவிட்டார். 

விபத்து நடந்த தினத்தின் இரவு 12.30 மணியளவில் வாக்கி டாக்கியில் ஷின்டேவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு டீமுடன் விரைந்தார் ஷின்டே. போலீஸ்காரர்களிடம் ஸ்ட்ரெச்சர் கூட இல்லை. உள்ளே மயங்கிக் கிடந்தவர்களை வெளியே கொண்டு வர வழி தெரியவில்லை. நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில்தான் விபத்து ஏற்பட்டது. ஷின்டே உள்ளே நுழையும் தருவாயில் கரும்புகை சூழ்ந்து அந்தப் பகுதியே இருட்டாகக் காணப்பட்டுள்ளது. ஷின்டேவாலும் கண்களைத் திறந்து பார்க்க முடியாத சூழல். இவருக்கும் மூச்சுத் திணறியுள்ளது. எனினும், அவர் முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை.  ஷின்டேவின் விடா முயற்சி காரணமாக எட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டன. 

பக்கத்து கட்டடத்தில் பணிபுரிந்துவந்த மகேஷ், கிரி என்ற இளைஞர்களும் 50-க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது. போலீஸ்காரர் ஷின்டே ஹீரோவாகப் பார்க்கப்பட்ட நிலையில், மகேஷ், கிரி ஆகிய இரு இளைஞர்களின் முயற்சியையும் ஷின்டே மனதாரப் பாராட்டியிருக்கிறார். ''உயிர்களைக் காப்பாற்றியது ஒரு கூட்டு முயற்சி. என்னைப் போன்று அங்கே பலரும் உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மகேஷ், கிரி என்ற இளைஞர்களும் உத்வேகத்துடன் செயல்பட்டு ஏராளமானோரைக் காப்பாற்றியுள்ளனர். என்னை மட்டுமே ஹீரோவாக உயர்த்திக் காட்டுவது சரியானது அல்ல. 8 உயிர்களைக் காப்பாற்றியதைவிட 14 உயிர்கள் அநியாயமாக இறந்துபோனது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. பப்பின் கழிவறை அருகேதான் ஏராளமானோர் மயங்கிக் கிடந்தனர். அவர்கள் கிடந்த நிலை என் கண் முன்னே இப்போதும்  நிழலாடுகிறது'' என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் ஷின்டே.

எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத நிலையிலும், தன் உயிரைத் துச்சமென மதித்து உயிர்களைக் காப்பாற்றிய ஷின்டேவின் துணிச்சலான செயலை மும்பை போலீஸ் கமிஷனர் தத்தாத்ரே பட்சாலிகர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. மும்பையில் இதுபோன்று 300 கட்டடங்கள் இயங்கி வருகின்றன. விதிகளை மீறி செயல்படும் கட்டடங்களுக்கு கடிவாளம் போடும் முயற்சியில் மகராஷ்டிர அரசு இறங்கியுள்ளது. மும்பை மாநகராட்சியைச் சேர்ந்த 5 அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!