வழக்கறிஞர் மரணம்: லாலுவின் தண்டனை விவரம் ஒத்திவைப்பு; நாளை அறிவிப்பு !

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விவர அறிவிப்பை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. 


பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையில் இருந்தபோதே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில், கடந்த டிசம்பர் 23-ல் தீர்ப்பளித்த நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட  7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்தார். 

தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டதால், சிறையிலிருந்து லாலுபிரசாத் யாதவ் ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். ஆனால், வழக்கறிஞர் விந்தேஸ்வரி பிரசாத் என்பவர் உயிரிழந்ததால், லாலுவின் தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். மேலும், லாலுவின் மகனும் பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், ரகுவனேஷ் பிரசாத் சிங் மற்றும் மனோஜ் ஜா ஆகியோர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்ததாகவும், அதனால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஜனவரி 23-ல் நேரில் ஆஜராகுமாறும் ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!