வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (04/01/2018)

கடைசி தொடர்பு:02:30 (04/01/2018)

சீனாவிலும் வசூல் வேட்டை நடத்திய அமீர்கானின் 'தங்கல்'!

அமீர்கான் நடித்த இந்திப் படம் 'தங்கல்' சீனாவிலும் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது.

Dangal

அமீர்கான் நடித்து பெருவாரியான பாராட்டையும் வசூலையும் அள்ளிக்குவித்த படம் 'தங்கல்'. மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், அமீர்கான் தன் இரு மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்குவதாகக் கதை அமைந்திருக்கும்.  இந்தப் படம் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் வெளியானது. இந்தியாவில் இந்தப் படம் ரூ.300 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

'தங்கல்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அந்தப் படம் சென்ற ஆண்டு மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. மொத்தம் 9,000 திரையரங்குகளில் படம் வெளியானது. அங்கும் இந்தப் படம் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. சீனாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் அல்லாத பிறமொழி சினிமா என்ற சாதனையை 'தங்கல்' பெற்றுள்ளது. இது படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், அமீர்கான் திரைப்படங்களுக்கு சீனாவில் பெரிய மார்க்கெட் உருவாகியிருக்கிறது. 

'தங்கல்' திரைப்படம் உலக அளவில் ரூ.1,800 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது ஆகும். இந்தத் திரைப்படத்தை  வெகுவாகப் பார்த்து ரசித்ததாக சீன அதிபர் ஜி ஜின்பிங், கஜகஸ்தானில் நடந்த மாநாடு ஒன்றில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து இருந்தார். வசூலில் பல்வேறு சாதனைகள் புரிந்தாலும் தங்கல் படத்துக்கு ஒரேயொரு தேசிய விருது தான் கிடைத்தது. படத்தில் அமீர்கானின் மகளாக சின்ன வயது கதாப்பாத்திரத்தில் நடித்த ஸைரா வாஸிம் இந்த விருதைப் பெற்றார்.