வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (04/01/2018)

கடைசி தொடர்பு:14:40 (04/01/2018)

தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வந்தால் அவரை இந்தி பேச நிர்பந்திக்க முடியுமா? சுஷ்மாவிடம் சீறிய சசி தரூர்

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் எதிர்காலத்தில் நாட்டின் பிரதமராக வந்தால், அவரை இந்தி பேச நிர்பந்திக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பினார். 

சசி தரூர்

Photo Credit: shashitharoor.in

ஐக்கிய நாடுகள் அவையில், அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவருவதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் பேசினார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ‘ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியை அலுவல் மொழியாகக் கொண்டுவர எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது. ஏன் இந்தியை அலுவல் மொழியாக்கக் கூடாது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஐ.நா-வில் மொத்தமுள்ள 193 உறுப்பினர்களில், 129 பேர் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே, இந்தியை அலுவல் மொழியாக்க முடியும். மேலும், இதற்காக ஆகும் செலவையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியர்கள் அதிகம் வாழும் சிறிய நாடுகளான பிஜி, மொரீஷியஸ் மற்றும் சுரிநாம் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைப் பெறுவதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன’ என்றார். 

அப்போது குறுக்கிட்ட எம்.பி ஒருவர், ‘ஐ.நா-வில் இந்தி அலுவல் மொழியாக்கப்பட்டால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40 கோடி செலவாகும் என்று சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த சுஷ்மா, ‘இதற்காக 40 கோடி ரூபாய் அல்ல, ரூ.400 கோடி செலவழிக்கக்கூட மத்திய அரசு தயாராக இருக்கிறது’ என்றார். மேலும், ஐக்கிய நாடுகள் அவையில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றியதையும் சுஷ்மா நினைவுகூர்ந்தார். 

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பியும், ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றியவருமான சசி தரூர், இந்திக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், ‘இந்தி நமது தேசிய மொழி அல்ல. அலுவல் மொழி மட்டுமே. ஐ.நா-வில் இந்திக்கு முன்னுரிமை கொடுப்பது முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஐ.நா-வில் நமக்கு அலுவல் மொழி என்ற ஒன்று ஏன் தேவை? உலக அளவில் அரபு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை, இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவு. ஆனால், அரபு மொழி 22 நாடுகளில் பேசப்படுகிறது. இந்தியை அலுவல் மொழியாகக்கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டும்தான். 

என்ன தேவைக்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கிறது என்பதுதான் கேள்வியே. இந்தி பேச விரும்பும் பிரதமர்களோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ இருந்தால் பிரச்னையில்லை. அவர்கள், இந்தியில் பேசுவதை மொழிபெயர்ப்பதற்காக நாம் செலவிடலாம். அதேநேரம், எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமரோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரோ வந்தால், அவர்களை இந்தி பேசியே ஆக வேண்டிய சூழலுக்கு நாம் ஏன் ஆளாக்க வேண்டும்? இந்தி பேசும் மக்களின் பெருமையை நான் புரிந்துகொள்கிறேன். அதேநேரம், இந்தி பேசாத இந்நாட்டு மக்களும் இந்தியர் என்பதில் பெருமைகொள்கிறார்கள்’ என்றார். 

இதற்குப் பதிலளித்துப் பேசிய சுஷ்மா, ’பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தி மொழி பேசுகின்றனர். ஒரே ஒரு நாட்டில் மட்டுமே இந்தி பேசப்படுகிறது என்ற உங்களின் கூற்று, உங்களின் புறக்கணிப்பைக் காட்டுகிறது’ என்றார். இதுகுறித்து எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில், இதுதொடர்பாக 129 நாடுகளுடன் அரசு தொடர்ந்து பேச்சு நடத்திவருவதாகக் கூறினார்.