வாட்ஸ் அப்பில் ரூ.500-க்கு விற்கப்படும் ஆதார் தகவல்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்

வாட்ஸ் அப்பில், கோடிக்கணக்கான மக்களின் ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பஞ்சாப் மாநிலம் சண்டிகரிலிருந்து வெளிவரும் ’தி ட்ரிபியூன் இந்தியா’ பத்திரிகை மேற்கொண்ட ஆய்வில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.500 கொடுத்தால் ஆதார் தகவல்களைத் தருவதாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ் அப்பில்  அந்தப் பத்திரிகையில் பணிபுரியும் செய்தியாளர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதைக் கண்டு அதிர்ந்த அவர், வாட்ஸ் அப் தகவல் குறித்து விசாரணையில் இறங்கினார். அந்த குறிப்பிட்ட நபர் அளித்த பேடிஎம் கணக்கில் 500 ரூபாய் மாற்றப்பட்டதும், உடனடியாக செய்தியாளருக்கு ஒரு ஆதார் தகவல்கள்குறித்த இணையதளம் ஒன்றின் இணைப்பும், அதற்கான கடவுச் சொல்லும் வாட்ஸ் அப்பில் குறுந்தகவலாக வந்துள்ளது. 

அந்த இணைப்பில் சென்று பார்த்த செய்தியாளர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார். அதில், கோடிக்கணக்கானோரின் ஆதார் எண்கள், வீட்டு முகவரி, அஞ்சலக பின் கோடு, தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி உள்ளிட்ட பாதுகாக்கப்படவேண்டிய தகவல்கள் இருந்துள்ளன. இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால், கூடுதலாக ரூ.300 கொடுத்த அந்த செய்தியாளருக்கு, குறிப்பிட்ட நபர் சாஃப்ட்வேர் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த சாஃப்ட்வேரில், நாட்டில் உள்ள எந்தவொரு நபரின் ஆதார் எண்ணை மட்டும் அளித்தால், அதைக் கச்சிதமாக பிரின்ட் செய்துகொள்ள முடியுமாம். இதுகுறித்து சண்டிகர் பகுதி தேசிய தனிநபர் அடையாள ஆணையத்திடம் ட்ரிபியூன் இந்தியா பத்திரிகை செய்தியாளர் புகார் அளிக்க, இதுகுறித்து அவசர அவசரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு, உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பதிலளித்த மத்திய அரசு, அந்தத் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தது. இந்த நிலையில்தான், ரூ.500-க்கு வாட்ஸ் அப்பில் ஆதார் தகவல்கள் விற்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய தனிநபர் அடையாள ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!