அமெரிக்காவை திறம்பட சமாளிக்கிறது வடகொரியா! கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு

அமெரிக்கா கொடுத்த  நெருக்கடியை வடகொரியா வெற்றிகரமாகச் சமாளித்ததாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

 

உலக நாடுகளின் கடும் எச்சரிக்கையையும் மீறி, தொடர்ந்து அணுஆயுதச் சோதனையில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. வடகொரியாவின் இந்தச் செயல்பாட்டுக்கு அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றன. அணுஆயுதச் சோதனையில் ஈடுபட்டுவரும் வடகொரியாவுக்கு எதிராக, பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன.

அண்மையில், நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன், அமெரிக்காவைத் தாக்கும் அணு ஆயுத ஏவுகணைக்கான ஸ்விட்ச் தனது மேஜையில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘வடகொரிய அணு ஆயுத ஸ்விட்சைவிட, அமெரிக்காவின் அணுஆயுத ஸ்விட்ச் பெரியது’ என்று காட்டமாகப் பதிலடி கொடுத்திருந்தார்.  

இந்த நிலையில், வடகொரியாவை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் கமிட்டி குழுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பினராயி விஜயன், ‘அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை வடகொரியா பின்பற்றுகிறது. உலக அரங்கில் அமெரிக்கா கொடுத்த  நெருக்கடிகளை வடகொரியா வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது’ என்று பாராட்டியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!