அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்! மத்திய அரசு மீது சரமாரி விமர்சனம்

வலுவான லோக்பால் சட்டத்தை இயற்றக்கோரி மார்ச் 23-ம் தேதியிலிருந்து மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே.

அன்னா


ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அன்னா ஹசாரே. காந்தியவாதியான இவர் ஊழலுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தியவர்கள். ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கண்காணிக்கவும் அவர்கள் ஊழல் செய்வதைத் தடுக்கவும் வலுவான லோக்பால் சட்டம் இயற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அன்னா ஹசாரே முகாமிலிருந்து வெளியே வந்துதான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினார்.

அன்னா ஹசாரே மீண்டும் ஊழலுக்கு எதிரானப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்து இருக்கிறார். அன்னா ஹசாரே கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் அரளிகட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக்கோரி வரும் மார்ச் மாதம் 23-ம் தேதியிலிருந்து டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

அன்னா ஹசாரே மேலும் கூறும்போது, “இப்போதைய மத்திய அரசு ஊழலுக்கு எதிராக பல்வேறு வாக்குறுதிகளைத் தந்தது. ஊழலுக்கு எதிராகப் போரிடுவோம் என்று பத்திரிகைகள், செய்தித் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை அளித்தது. ஆனால், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். ஒஇந்தச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாடுமுழுவதும் 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த அரசும் அவர்களின் நலனுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. பெருநிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாதது ஏன்? ஊழலையும், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தேசிய அளவிலான இயக்கம் ஒன்றை ஏற்படுத்தும்படி ஏராளமான மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். மக்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்கள்” என்றார். 

தேர்தல் நடத்தும் முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அன்னா ஹசாரே வலியுறுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!