பயணங்களில் மொபைலைத் தாண்டி அருகிலிருப்பவர்களையும் கவனிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

பயணங்களில், மொபைலைத் தாண்டி அருகிலிருப்பவர்களையும் கவனிக்க வேண்டும் என்ற விழிப்புஉணர்வை ஏற்படுத்தியிருக்கிறது சமீபத்தில் கேரளாவில் நடந்த சோக சம்பவம் ஒன்று. 

நஷிடா என்ற எட்டு மாத கர்ப்பிணிப் பெண், பேருந்தில் உட்காருவதற்கு யாரும் இடம் தராத காரணத்தால் நின்றுகொண்டே பயணம் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பேலன்ஸ் இல்லாமல் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவம், கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பஸ்ஸுக்காக வெகு நேரம் காத்திருந்தவர், வேறு வழியில்லாமல்தான் கூட்டம் நிரம்பி வழிந்த அந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறார், நஷிடா. யாரும் இடம்தராத காரணத்தால், படிக்கட்டு அருகே நின்றுகொண்டே வந்துள்ளார். ஒரு வளைவில் பேருந்து திரும்பியபோது, பேலன்ஸ் தவறி சாலையில் விழுந்தவரை, பலத்த ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவர் வயிற்றிலிருந்த பிள்ளையைக்  காப்பாற்ற முடிந்த மருத்துவர்களால் நஷிடாவை காப்பாற்ற முடியவில்லை. நஷிடாவுக்கு ஏற்கெனவே 9 மற்றும் 4 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது பிறந்த ஆண் குழந்தையுடன் சேர்த்து மூன்று பிள்ளைகள் தாயில்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. 

கர்ப்பிணிப் பெண் - பயணம்

கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதுதான் நிலை. நம் தமிழ்நாட்டிலும் நிறைமாத கர்ப்பிணிகள் பேருந்துகளில் நின்றபடியே பயணம் செய்வதைப் பார்த்திருப்போம். இந்த விஷயத்தில் நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. 

நஷிடாவின் மரணத்தையே எடுத்துக்கொள்வோம். எட்டு மாத நஷிடாவின் நிறைமாத கர்ப்பம் அந்தப் பேருந்தில் இருந்த அனைவருக்குமே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் ஒருவர்கூட எழுந்திருந்து தங்கள் இடத்தைக் கொடுக்காதது ஏன்? அந்த அளவுக்கா நம் நெஞ்சங்களில் ஈரம் உலர்ந்துவிட்டது. 

பேருந்தில் படிகளுக்குப் பக்கத்திலேயே இருக்கும் இருக்கைகள், வயதானவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் மாற்றுத்திறனாளிகளும் உட்காருவதற்கான இருக்கைகள்தானே... அந்த இருக்கைகளில் இருந்தவர்களுக்கு, தாங்கள் உட்கார்ந்திருப்பது நஷிடாவுக்கான இருக்கை என்ற நியாயம் உறைக்கவில்லையா? 

கர்ப்பிணிப் பெண்

இன்னும் சிலர் இருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் வந்து நின்றாலும், அதைப் பார்க்காததுபோல கண்களை மூடி தூங்கும் பாவனை செய்வார்கள். இவர்கள் வீட்டுப் பெண்கள் வந்து நின்றாலும், இப்படித்தான் நடந்துகொள்வார்களா? 

ஒரு கர்ப்பிணிக்கு தங்கள் சீட்டை விட்டுத்தராத மக்களின் மனப்பான்மையும் கவனிக்கவேண்டிய கவலையான விஷயம். 'என் சீட்டை கொடுத்துட்டா, நான் அரை மணி நேரம் நின்னுட்டே வரணுமே' என்கிற எண்ணமே, அருகில் நிற்கும் வயதான, கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கக் காரணமாகிறது. பஸ்ஸில் நின்று டிராவல் செய்யமுடியாத பலவீனம், யாருக்கும்  எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே, நம்மைச் சுற்றியிருப்பவர் மீது ஒரு சின்ன அக்கறை வேண்டும். 

பெண்களைப் பொறுத்தவரை, பீரியட்ஸ் நாள்களின்போது, 'நானே வலியில் கஷ்டப்பட்டிருக்கேன். நான் எப்படி என் சீட்டை விட்டுக்கொடுக்கிறது' என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்து, நிற்கிறவர்களைக் கண்டும் காணாமல் இருப்பார்கள். உங்கள் வலி நியாயமானதுதான். ஆனால், உங்களால் சமாளிக்க முடியும் என்கிற பட்சத்தில், முடியாமல் தவிப்பவர்களுக்கு உங்கள் இடத்தை விட்டுக் கொடுத்துப் பாருங்கள். ஒருவருக்கு உதவி செய்த மனநிறைவு வலியை மறக்கச் செய்யும். 

ஒரு சிலர், ‘கூட்டமான பஸ்ல ஏன் ஏறணும். அடுத்த பஸ்ல வரவேண்டியதுதானே' என்றெல்லாம் சொல்லி, உறுத்தும் தங்கள் மனசாட்சியை அடக்குவார்கள். மனசாட்சியை அடக்குவதற்குப் பதிலாக, அதற்குச் செவி கொடுப்பது சிறந்த விஷயமாயிற்றே. இப்படி மனசாட்சிக்கு ஒருவர் செவி கொடுத்திருந்தாலே கேரளச் சம்பவம் நடந்திருக்காது. 

போன்

கடைசியாக ஒரு விஷயம், நீங்கள் டிராவல் செய்யும்போது ஸ்மார்ட்போனை தாண்டி, உங்கள் அருகில் நிற்பவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள். இயலாதவர்கள் நிற்கிறார்கள் என்றால், இடம் கொடுங்கள். ஒரு பயணம், ஓர் இருக்கை என்கிற அளவில் பார்த்தால், இது மிகச்சிறிய விஷயம்தான். ஆனால், பலன் இன்னொரு கர்ப்பிணிப் பெண் உயிரிழக்க மாட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!