29 வயது இன்ஜினீயரை கடத்திச்சென்று கல்யாணம்: கண்ணீர்விட்டுக் கதறி அழுத வாலிபர்!

பீகாரில் 29 வயது இளைஞரை கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

forced marriage
 

பீகாரில் பொகாரோ ஸ்டீல் பிளான்ட்டில், ஜூனியர் மேலாளராக பணிபுரியும் பொறியியல் பட்டதாரி வினோத் குமார். கடந்த டிசம்பர் 3-ம் தேதி பாட்னாவின் பாண்டராக் பகுதிக்கு வினோத் கடத்திச் செல்லப்பட்டார். அங்கிருந்து மொக்காம என்னும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட வினோத்துக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. வினோத்தை சுற்றிவளைத்த பெண்கள் அவரைக் கட்டாயப்படுத்தி திருமணத்துக்கான பூஜை சடங்குகள் செய்ய வைத்துள்ளனர். வினோத் அவர்களுக்கு ஒத்துழைக்காமல் கதறி அழுதுள்ளார். ’உனக்கு திருமணம்தான் செய்துவைக்கிறோம். கொலை செய்யவில்லை’ என்று அங்கிருந்த பெண்கள் வினோத்தை சமாதானப்படுத்தியுள்ளனர். வினோத்தை மிரட்டி திருமணத்தையும் முடித்துவிட்டனர். இதனிடையே வினோத்தின் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று தேடத் தொடங்கியுள்ளனர். பெண் வீட்டார் வினோத்தின் குடும்பத்தினரை போனில் அழைத்து ‘வினோத்துக்குத் திருமணம் முடிந்துவிட்டது. எங்கள் பெண்ணை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று மிரட்டியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த வினோத் குடும்பத்தினர் பாண்டராக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் விசாரித்தபோது பெண்ணின் அண்ணன் ‘இது வினோத் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம்தான்’ என்றார். இதைத் தொடர்ந்து திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ போலீஸ் கையில் சிக்கியது. அந்த வீடியோ மூலம் வினோத் அழுதுகொண்டே பெண்ணுக்கு மாலை அணிவிப்பதும், ’என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறுவதும் வெளிச்சத்துக்கு வந்தது.  மேலும், தன்னை துப்பாக்கி வைத்து மிரட்டியதாகவும் வினோத் போலீஸில் தெரிவித்துள்ளார். பெண் விட்டார் பிடியில் இருந்து வினோத்தை மீட்ட காவல்துறை வினோத்தின் குடும்பத்துக்கு பாதுகாப்பும் அளித்தனர். பீகாரின் ஒரு சில கிராமங்களில் ஆண்களைக் கட்டாயப்படுத்தி திருமணம் நடத்தி வைக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதாக காவல்துறை கவலை தெரிவித்துள்ளது. பீகாரில் 2016-ல் மட்டும் மொத்தம் 2,877 கட்டாயத் திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!