நூறாண்டுகள் பழமையான பாலத்தை 8 மணி நேரத்தில் மாற்றியமைத்த ரயில்வே!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே 100 ஆண்டுகள் பழமையான ரயில் பாலத்தை வடக்கு ரயில்வே அதிகாரிகள் 8 மணி நேரத்துக்குள் மாற்றி, புதிய பாலத்தை நிறுவினர். 

நாட்டின் பழமையான ரயில் பாதைகளில் ஒன்றான சஹரான்பூர் - லக்னோ வழித்தடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் பல பாலங்கள் இருந்து வருகின்றன. அவற்றைக் கருத்தில் கொண்டு அந்தப் பாதையில் செல்லும் ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடு கடந்த ஐந்தாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் ஆகும் காலதாமதத்தைக் குறைக்கவும் பாதுகாப்புக் கருதி பாலங்களைப் புதுப்பிக்கவும் வடக்கு ரயில்வே முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. 

இதுதொடர்பாகப் பேசிய வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர் விஷ்வேஸ் சௌபே, ‘இந்தப் பாலம் சஹரான்பூர் - லக்னோ வழித்தடத்தில் புந்த்கி - நகினா பகுதியில் அமைந்துள்ளது. இரும்புப் பாலத்தை மாற்றிவிட்டு புதிய ஆர்.சி.சி வகையிலான கான்கிரீட் பெட்டிகள் அமைப்புகளைப் பொருத்தினோம். பழைய பாலத்தை 7.30 மணி நேரத்தில் மாற்றி புதிய பாலத்தைப் பொருத்திவிட்டோம். இந்தப் பணியில் இரண்டு கிரேன்கள் மற்றும் ஜே.சி.பி, பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன’ என்று தெரிவித்தார். இதன்மூலம், அந்த வழித்தடத்தில் உள்ள பழைமையான 4 பாலங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த மாதத்துக்குள் மீதமுள்ள 2 பாலங்களும் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!