வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (07/01/2018)

கடைசி தொடர்பு:17:30 (07/01/2018)

ரூ.500-க்கு ஆதார் தகவல்கள் செய்தி: பத்திரிகையாளர் மீது வழக்கு!

500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாக செய்தி வெளியிட்ட பஞ்சாப் பத்திரிகைச் செய்தியாளர் மீது தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரிலிருந்து வெளிவரும் ’தி ட்ரிபியூன் இந்தியா’ பத்திரிகை மேற்கொண்ட ஆய்வில், ரூ.500-க்கு கோடிக்கணக்கான மக்களின் ஆதார் தகவல்கள் கிடைப்பதாக அந்த பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த செய்தியின் சாரம்சம் இதுதான். ‘500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் கிடைக்கும் என்று வாட்ஸ் அப்பில் வந்த தகவல் குறித்து செய்தியாளர் ஒருவர் விசாரணையில் இறங்கினார். அந்த குறிப்பிட்ட நபர் அளித்த பேடிஎம் கணக்கில் 500 ரூபாய் மாற்றப்பட்டதும், உடனடியாக செய்தியாளருக்கு ஒரு ஆதார் தகவல்கள் குறித்த இணையதளம் ஒன்றின் இணைப்பும், அதற்கான கடவுச் சொல்லும் வாட்ஸ் அப்பில் குறுந்தகவலாக வந்தது. 

அந்த இணைப்பில் சென்று பார்த்த செய்தியாளர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார். அதில், கோடிக்கணக்கானோரின் ஆதார் எண்கள், வீட்டு முகவரி, அஞ்சலக பின் கோடு, தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி உள்ளிட்ட பாதுகாக்கப்படவேண்டிய தகவல்கள் இருந்துள்ளன. இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால், கூடுதலாக ரூ.300 கொடுத்த அந்த செய்தியாளருக்கு, குறிப்பிட்ட நபர் சாஃப்ட்வேர் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த சாஃப்ட்வேரில், நாட்டில் உள்ள எந்தவொரு நபரின் ஆதார் எண்ணை மட்டும் அளித்தால், அதைக் கச்சிதமாக பிரின்ட் செய்துகொள்ள முடியும்’’. 

இந்த செய்தி வெளியானவுடன் அதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்த தேசிய தனிநபர் அடையாள ஆணையம், ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியது. ரூ.500-க்கு ஆதார் தகவல்கள் கிடைப்பதாக வெளியான செய்திகள் யாவும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் கண்டிப்பு காட்டியது. இதுகுறித்து ஜனவரி 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி சண்டிகர் பகுதி தேசிய தனிநபர் அடையாள ஆணையம் சார்பில் தி ட்ரிபியூன் பத்திரிகைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேசிய தனிநபர் அடையாள ஆணையம் கொடுத்த புகாரின் பேரில் அந்த பத்திரிகை மீதும், செய்தியாளர் மீதும் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.