வெளியிடப்பட்ட நேரம்: 03:04 (08/01/2018)

கடைசி தொடர்பு:07:49 (08/01/2018)

ட்விட்டரில் மோதிக்கொண்ட இரு மாநில முதல்வர்கள்... போர்க்களமான இணையகளம்!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கர்நாடகத்தில் பிரசாரப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை, ட்விட்டர் மூலம்  முதல்வர் சித்தராமையா வஞ்சப்புகழ்ச்சியுடன் வரவேற்க, அதற்கு ஆதித்யநாத் எதிர்வினையாற்றியுள்ளார். இதனால், ட்விட்டர் களம் போர்க் களமாகியுள்ளது.

Yogi Adityanath,Siddaramaiah

முதலாவதாக சித்தராமையா, `கர்நாடகாவுக்கு வருகைதரும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நான் வரவேற்கிறேன். எங்களிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம் சார். எங்கள் மாநிலத்தில் நீங்கள் இருக்கும்போது, இந்திரா கேன்டீன் மற்றும் ஒரு ரேஷன் கடைக்குச் சென்று பாருங்கள். அது, உங்கள் மாநிலத்தில் பட்டினியால் இறப்பு ஏற்படுகிறது என்று அவ்வப்போது வரும் செய்திகளுக்குப் பதிலளிக்க உதவும்' என்று ஆதித்யநாத்தை சூசகமாகத் தாக்கினார். 

அதற்கு ஆதித்யநாத், `உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி சித்தராமையா. கர்நாடகாவில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான் என்று நான் கேள்விப்பட்டேன். பல நேர்மையான அதிகாரிகள் கொல்லப்பட்டதையும் பலர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதையும் நான் சொல்லத் தேவையில்லை. உங்கள் கூட்டாளிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள துன்பங்களைச் சரிசெய்ய, உத்தரப்பிரதேச முதல்வராக நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன்' என்று எதிர்வினையாற்றினார்.