வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (08/01/2018)

கடைசி தொடர்பு:16:55 (08/01/2018)

`பல வருஷம் பின்னோக்கி அழைத்துச் சென்ற 5 நாள்!' - குமுறிய அரசுப் பள்ளி ஆசிரியர்

ஐந்தாவது நாளாகப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் தருமபுரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

bus strike

பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மக்கள் அதிகம் வாழும் மாவட்டமாக இருக்கும் தருமபுரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் தங்கள் தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பூக்கள் போன்ற பொருள்களை வணிக மையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் அனைத்தும் வீணாகிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நான்கு, ஐந்து நாள்களாக எந்த வேலையும் சரியாகச் செய்ய முடியாமல் பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முதல் அலுவலகம் செல்வோர் வரை அனைவரும் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் இயங்கும் மூன்று சக்கர ஆட்டோக்கள் இயல்பான கட்டணத்தை மாற்றி அதிக கட்டணம் வசூலிப்பதாகத் தருமபுரி நகர மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

bus strike

நகரப் பகுதிக்குச் செல்ல இயல்பான கட்டணம் 5 ரூபாய் என்றால், தற்போது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு நபருக்கு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகப் புலம்புகிறார் அலுவலகப் பணிக்குச் செல்லும் சுப்பிரமணி.

மேலும், தருமபுரி பென்னாகரம் அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ``நாங்கள் கிராமப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றுகிறோம். நாங்கள் பணியாற்றும் பகுதிக்குச் சரியான போக்குவரத்து வசதி இல்லை. இரண்டு அரசுப் பேருந்துகள் மட்டுமே செல்கிறது. நேரம் தவறினால் சரியான நேரத்துக்கு பள்ளிக்குச் செல்வது இயலாத காரியம். தற்போது ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் அந்தக் காலை நேர இரண்டு அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

கடந்த ஐந்து நாட்களாக நாங்கள் தவித்துவருகின்றோம். இந்த நான்கு நாள்கள் எங்களைப் பல வருஷம் பின்னோக்கி அழைத்துச் சென்றது போல் உணர்கிறோம். எங்களைப் போன்ற பணியாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும்” என வருந்துகிறார்.

இதில், பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள்தான். தொலைவிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் நான்கு சக்கர ஆட்டோக்களிலும் டிராக்டர்களிலும் தனியார் கல்லூரி, பள்ளிப் பேருந்துகளிலும் ஏறி பள்ளிக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பேருந்துகளில் படிகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கின்றனர். இன்னும் சில பள்ளி குழந்தைகள் வெகு தொலைவிலிருந்து நடந்தே பள்ளிக்கு வருகின்றனர். மேலும், பல பகுதிகளில் உடல்நிலைப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைச் செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் நலனை அரசு காத்திட வேண்டும் எனவும் தருமபுரி மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.