வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (11/01/2018)

கடைசி தொடர்பு:14:05 (11/01/2018)

வீடற்றவர்களுக்கு எப்படி ஆதார் வழங்குவீர்கள்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

'வீடில்லாதவர்களுக்கு எப்படி ஆதார் வழங்குவீர்கள்' என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Supreme Court

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில், வீடற்றவர்கள் இரவில் தங்குவதற்கு இடவசதி இல்லாமல் இருப்பதால், அவர்களுக்காகத் தற்காலிக முகாம்கள் அமைக்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி மதன் பி.லோகூர் முன்னிலையில் நடைபெற்றது. 

அப்போது, “வீடற்றவர்கள் இந்தியர்கள் இல்லையா? வீடோ நிரந்தர முகவரியோ அவர்களுக்கு இல்லாதபோது, அவர்களுக்கு  எப்படி ஆதார் வழங்குவீர்கள்? ஆதார் பெற நிரந்தர முகவரி கட்டாயம் என்று சொல்லும்போது, அவர்கள் எப்படி ஆதார் பெற முடியும்... அரசின் பிற நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும்?” என்று நீதிபதி லோகூர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். 

வழக்கு விசாரணைக்காக உத்தரப்பிரதேச அரசு சாரபில் அந்த அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இந்த வழக்கில் உத்தரப்பிரதேச அரசின் தலைமைச் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 17.7 லட்சம் பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் இது, 0.15 சதவீதம் ஆகும். அரசின் சமூக நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை அரசியல்சாசன அமர்வு விசாரித்துவருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வீடற்றவர்களுக்கு ஆதார் பற்றிய இக்கேள்வியை எழுப்பியிருக்கிறது.