வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (11/01/2018)

கடைசி தொடர்பு:13:34 (11/01/2018)

`நல்ல காரியத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறேன்!’ - ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அரண்மனையை வழங்கிய குஜராத் இளவரசர்

குஜராத்தைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கைப் பழக்கம்கொண்ட இளவரசர், அவருடைய அரண்மனையை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு மாற்றிவருகிறார். 

குஜராத் மாநிலம் ராஜ்பிபிலா பகுதியைச் சேர்ந்த இளவரசர், மன்வேந்திர சிங் கோஹில். அவருக்கு வயது 52. தான் ஒரு ஒரினச் சேர்கையாளர் என்று அறிவித்த முதல் இந்திய இளவரசர். ராஜ்பிபிலா சமஸ்தானத்துக்கான சொத்துகளுக்கு அவர்தான் வாரிசு. அவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். தற்போது, அவருக்குச் சொந்தமான அரண்மனையை ஓரினச் சேர்க்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு ஏற்ப மாற்றியமைத்துவருகிறார். அந்த அரண்மனை, சுமார் 15 ஏக்கர் அளவில் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த அரண்மனையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறார். அவர், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக லக்‌ஷயா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். இதுகுறித்து தெரிவித்த அவர், 'ஒரினச் சேர்க்கையாளர்கள் இன்றும் நிறையப் பிரச்னைகளைச் சந்தித்துவருகின்றனர். எனக்கு குழந்தைகள் இருக்கப்போவதில்லை. அதனால், இவ்வளவு பெரிய இடத்தை நல்ல காரியத்துக்காகப் பயன்படுத்த நினைத்தேன். காலனியாதிக்க காலத்தில்தான், ஒரினச் சேர்க்கையாளர்கள் குற்றவாளிகளாக சித்திரிக்கப்பட்டனர். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான தடை நீக்கப்பட்டால், மேலும் நிறையப் பேர் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு தருவார்கள்' என்று தெரிவித்தார்.