வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (11/01/2018)

கடைசி தொடர்பு:16:20 (11/01/2018)

`காஷ்மீர் தீவிரவாதிகள் அனைவரும் தியாகிகள்’- சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ.

'பாதுகாப்புப் படையால் கொல்லப்படும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரும் தியாகிகள்' என்று கூறி, ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ., சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

அய்ஜாஸ் அஹ்மது மிர்


ஜம்மு-காஷ்மீர் எல்லையில், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள்மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன், பயிற்சிபெறும் தீவிரவாதிகளும் இந்திய பாதுகாப்புப் படையினர்மீது தாக்குதல் நடத்துவதுண்டு. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஊடுருவ முயலும் தீவிரவாதிகளை, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் சுட்டுக்கொல்வதும் நடப்பதுண்டு. 

இந்த விவகாரம்குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீர் மக்கள், ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ.அய்ஜாஸ் அஹ்மது மிர், ‘தீவிரவாதிகள் கொல்லப்படுவதை நாம் கொண்டாடக்கூடாது. அது நம் அனைவரின் தோல்வி. நம் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் அவர்களைக் கொன்றதாக செய்தியைக் கேள்விப்படும்போது, அவர்கள் உயிர்த் தியாகத்தை எண்ணி சோகம் ஏற்படும்’ என்று கூறினார். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரதிநிதியான தினேஷ்வர் ஷர்மா, மாநிலத்தில் உள்ள ஹுரியாத் தலைவர்கள், தீவிரவாதிகள் என அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் வாச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக அய்ஜாஸ் இருந்துவருகிறார்.