வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (11/01/2018)

கடைசி தொடர்பு:11:16 (12/01/2018)

``இந்திரா காந்தியாக நடிப்பது என் நீண்ட நாள் கனவு” மீண்டும் பயோபிக்கில் வித்யா பாலன்

வித்யா பாலன்


பாலிவுட்டின் ‘போல்ட் அண்டு பியூட்டிஃபுல்’ நடிகை வித்யா பாலனை, மிக விரைவில் இந்திரா காந்தியாக வெள்ளித் திரையில் பார்க்கலாம். ஆம்! பிரபல ஆங்கில பத்திரிகையாளர் சாகரிகா கோஷ் (Sagarika Ghose) எழுதிய ‘இந்திரா: இண்டியா’ஸ் மோஸ்ட் பவர்ஃபுல் பிரைம் மினிஸ்டர்” (Indira: India's Most Powerful Prime Minister) என்ற சுயசரிதை புத்தகத்தைத் திரைப்படமாக்கும் காப்புரிமையை வித்யா பாலன் மற்றும் அவரின் கணவர் சித்தார்த் ராய் கபூரின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் வாங்கியிருக்கிறது. 

இதுகுறித்து வித்யா பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாகரிகா ஜோஷின் புத்தகத்தின் திரைப்பட காப்புரிமையைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்திரா காந்தியின் சுயசரிதை திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. இதனைத் திரைப்படமாக எடுப்பதா அல்லது வெப் சீரிஸாக எடுப்பதா என்பதைப் பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை. இதனை முடிவுசெய்வதற்கு இன்னும் சில காலம் எடுக்கலாம்”, என்று தெரிவித்திருந்தார்.

 
இந்திராபத்திரிகையாளர் சாகரிகா ஜோஷூம் இந்தச் செய்தியை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அவர், இந்தத் திரைப்படத்தை பற்றிக் குறிப்பிடுகையில், இந்திராவின் கணவர் ஃபெரோஸ் காந்தி (Feroze Gandhi) கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர் இந்தி நடிகர் அக்‌ஷய் கண்ணா என்று தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், சாகரிகா வெளியிட்ட இந்தப் புத்தகத்தில், இந்திரா காந்தியைப் பற்றி பல வரலாற்றுப் பேராசிரியர்கள் மற்றும் சுயசரிதை எழுத்தாளர்கள் இந்திரா பற்றிய தங்களின் ஆய்வை அதில் பேசியிருந்தார்கள். 1975ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நடத்திய அவசரகால பிரகடனத்திற்காக காரணங்களையும், அவரின் பிற அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. ஆனால், இந்தப் புத்தகம் வெளியானபோது, பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானது என்பது குறிப்பிடத்தக்கது. 

வித்யா

தற்போது, இவரின் சுயசரிதையில் வித்யா பாலன் நடிப்பதைப் பற்றி சமூகவலைதளத்தில் வாழ்த்துகள் குவிக்கின்றன. கடந்த ஆண்டு, வித்யா பாலன் நடித்து வெளியான, “தும்ஹாரி சுலு” என்ற திரைப்படத்தில், நகைச்சுவை செய்யும் குடும்பப் பெண்ணாக வித்யா நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. கடந்த 2005ம் ஆண்டு, பரிநிதா (Parineeta) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு என்ட்ரீ ஆன வித்யா பாலன், தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களிலேயே பெரும்பாலும் தேர்ந்தேடுத்து நடித்தார். ’கஹானி’, ’நோ ஒன் கில்டு ஜெஸ்ஸிகா’, ’லகே ராஹோ முன்னா பாய்’ ஆகிய திரைப்படங்களுக்கு இவர் கதாபாத்திரங்கள் நல்ல பெயரை எடுத்துத் தந்தது. தமிழ்சினிமாவில் மறக்க முடியாத நடிகையான சில்க் ஸ்மிதாவின் சுயசரிதையில் இவர் போல்டாக நடித்து வெளிவந்த ‘தி டர்டி பிக்சர்’ என்ற திரைப்படம், வித்யாவின் சினிமா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார் வித்யா பாலன் என்பது குறிப்பிடத்தக்கது. சுயசரிதை திரைப்படங்களில் நடிப்பதற்கு வித்யா பாலனுக்கு எப்போதும் ஆர்வம் இருந்தாலும், மிகவும் தேர்வுசெய்து அத்தகைய திரைப்படங்களில் நடிப்பதாக ஒருமுறை கூறியிருக்கிறார் வித்யா. “தி டர்டி பிக்சர்” திரைப்படத்தை முடித்தபோது, எம்.எஸ். சுப்புலட்சுமி, இந்திய எழுத்தாளர் கமலா தாஸ் உள்ளிட கிட்டதட்ட பத்து பிரபலங்களின் சுயசரிதை திரைப்படங்களில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால், அதில் தனக்கு ஏற்றத் திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடிப்பதற்குத்தான் விருப்பம் உள்ளதாகவும் வித்யா பாலன் கூறியிருந்தார். 


தற்போது, இந்தியாவின் மிகமுக்கிய பெண் ஆளுமையான இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் வித்யா பாலன், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்