“நீங்கள் வாதாட ஏன் தடை விதிக்கக் கூடாது!” வழக்கறிஞர்களாக இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு பார் கவுன்சில் கேள்வி

“நீங்கள் வழக்குகளில் வாதாட ஏன் தடை விதிக்கக் கூடாது” என்று வழக்கறிஞர்களாக இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு இந்திய பார் கவுன்சில் கேள்வி எழுப்பியுள்ளது.

பார் கவுன்சில்

 

இந்தியாவில் வழக்கறிஞர்களாக இருக்கும் சிலர் எம்.பி., எம்.எல்.ஏ-க்களாகவும் உள்ளனர். அவர்கள் சில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உள்பட நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாடி வருகிறார்கள். இதற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி அஷ்வினி உபாத்யாயே என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் அரசு ஊதியம் பெறும் பொது ஊழியர்கள் என்பதால், அவர்களை நீதிமன்றங்களில் வாதாட அனுமதிக்கக் கூடாது. இது அவர்கள் இரட்டைக் குதிரைகளில் பயணம் செய்வது போல ஆகும் என்று உபாத்யாயே தன் மனுவில் சுட்டிக்காட்டிள்ளார்.

இதைப்பற்றி இந்திய பார் கவுன்சில் ஆய்வு செய்துவருகிறது. இதற்காக பி.சி.தாக்கூர், ஆர்.ஜி.ஷா, டி.பி. தல் ஆகிய வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வழக்கறிஞர்களாக இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்மூலம் அவர்களின் விளக்கத்தைப் பெற தீர்மானித்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக வருகிற 21-ம் தேதி  பார் கவுன்சில் இறுதி முடிவு எடுக்கவுள்ளது.

பார் கவுன்சில் விதி 49 ஆனது, அரசு ஊதியம் பெறுபவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதைத் தடை செய்கிறது. மேலும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 21-ன் உட்பிரிவு 2 (சி) (ஊழல் தடுப்புச்சட்டம்) எம்.பி, எம்.எல்.ஏ-க்களை பொதுத்துறை ஊழியர்களாகக் கருதுகிறது. இவற்றையெல்லாம் பார் கவுன்சில் கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வழக்கறிஞர்களாகவும், அதே நேரத்தில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் பதவிவகிப்பவர்கள் சுமார் 500 பேர் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!