`நீதித்துறை மாண்பே சீர்குலைந்துவிட்டது'! - தலைமை நீதிபதியை அதிர வைத்த 6 கோரிக்கைகள்

நீதிபதி


நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக ஊடகங்களிடம் புகார் தெரிவித்தனர். நீதிபதியாக இருப்பவர்கள் ஊடகங்களிடம் தங்கள் குறைகளைத் தெரிவிப்பது இதுவே முதல்முறை என்பதால் நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

போர்க்கொடி தூக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேரும் ஏற்கெனவே தங்கள் குறைகள் குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்தக் கடிதத்தில் நீதித்துறையின் மாண்புகள் சீர்குலைந்துபோய் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர். 

புகார் கூறிய நீதிபதிகள் தங்கள் முக்கியக் குறைகளாகக் கருதுபவை பின்வருமாறு:
1. முக்கிய வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில்தான் விசாரிக்கப்பட வேண்டும்.  அவற்றை பிற மூத்த நீதிபதிகள் தலைமையிலான அமர்வுக்கு ஒதுக்கக் கூடாது.

2. நீதிமன்ற அமர்வுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது.

3. நீதிபதி பி.எம்.லோயா மர்ம மரணம் குறித்த பொதுநல வழக்கு விசாரணையை முதல் நான்கு அமர்வுகளுக்கு ஒதுக்காமல், 10 வது அமர்வுக்கு வழங்கியது தவறு. ஏனெனில், அது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அங்கம் வகிக்கும் அமர்வு அல்ல. 

4. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி செலமேஸ்வர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கோகாய், லோகூர், ஜோசப் மற்றும் தான் அடங்கிய 5 பேர் அமர்வுக்கு வழக்கை மாற்றினார். ஆனால், அந்த வழக்கு தலைமை நீதிபதியால் மீண்டும் வேறொரு அமர்வுக்கு மாற்றப்பட்டது. இது நீதிபதிகள் நால்வருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

5. ஏற்கெனவே 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கை, தலைமை நீதிபதி அதற்கும் குறைவான நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைத்து விசாரிப்பதை இந்த நீதிபதிகள் நால்வரும் தவறு என்று வாதிடுகிறார்கள்.

நீதிபதி


6. நீதிபதிகள் நால்வரும் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு எதிராக 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தத் தீர்ப்பு வழங்கிய அமர்வில், இந்த நான்கு நீதிபதிகளில் இரண்டு பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள், கர்ணனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல்  நீதிபதிகள் நியமனம் தொடர்பான செயல்முறையை நாம் மறுஆய்வு செய்ய வேண்டும், அதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற கருத்தைத் தெரிவித்தனர். ஆனால், அது எந்தவிதத்திலும் கண்டுகொள்ளப்படவில்லை என்று நீதிபதிகள் கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.
 
தலைமை நீதிபதியிடம் தொடர்ந்து முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையில், நீதிபதிகள் 4 பேரும் இன்று ஊடகங்களிடம் தலைமை நீதிபதிக்கு எதிராகக் கொந்தளித்துள்ளனர். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியிருக்கிறது. “நீதிபதிகளே இப்படி அரசியல்வாதிகள் போல் நடந்துகொண்டால் எப்படி” என்று ஒரு தரப்பினரும், “நியாயமான எதிர்ப்புக்குரலைத்தான் எழுப்பியிருக்கிறார்கள்” என்று இன்னொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!