வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (12/01/2018)

கடைசி தொடர்பு:18:28 (12/01/2018)

“எங்களைக் கொல்ல எதிரி தேவையில்லை”! - கொந்தளிக்கும் முன்னாள் ராணுவ வீரர்

 

இந்திய ராணுவ தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய ராணுவத்தின் முதல் தளபதி கே.எம்.கரியப்பாவைக் கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ராணுவ தினத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வானில் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து ராணுவ வீரர்கள் கயிறு மூலம் இறங்கும் நிகழ்வை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத பகுதிகளில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, ராணுவ வீரர்கள் இவ்வாறு கயிறு மூலமாகத்தான் அந்தப் பகுதியில் களமிறங்குவார்கள். 

ராணுவ வீரர்கள்

 

இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி 9-ம் தேதி நடைபெற்றது. துருவ் ரக ஹெலிகாப்டரிலில் இணைக்கப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு ராணுவ வீரர்கள் தரையிறங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென ஹெலிகாப்டருடன் பிணைக்கப்பட்ட கயிறு அறுந்துபோனது. . அப்போது கயிற்றைப் பிடித்தபடி தரையிறங்கிக்கொண்டிருந்த 3 வீரர்கள் மேலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஹெலிகாப்டரில் கயிறு பிணைக்கப்பட்டிருந்த பகுதி மோசமான நிலையில் இருந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும். 

இந்தச் சம்பவம் ராணுவ வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சுரேந்திர பூர்னியா, வீரர்கள் ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழும் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “நமது வீரர்களைக் கொல்ல எதிரி தேவையில்லை. இதுபோன்ற மோசமான உபகரணங்களே போதும்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். 
ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள் வைரலாகப் பரவிவருகின்றன.