பாஸ்போர்ட்டுகளை முகவரிச் சான்றாகப் பயன்படுத்த முடியாது! நிறத்தையும் மாற்ற மத்திய அரசு திட்டம்

பாஸ்போர்ட்டுகளின் கடைசிப் பக்கத்தில் முகவரி உள்ளிட்ட எந்த தகவலும் இனி அச்சிடப்படாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

 

பொதுவாக பாஸ்போர்ட்டுகளின் கடைசி பக்கத்திலேயே முகவரி, பெற்றோர் அல்லது காப்பாளர் மற்றும் கணவன் அல்லது மனைவி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். பாஸ்போர்ட்டுகளில் தந்தையின் பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற விதியை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்தனர். இதையடுத்து, வெளியுறவுத்துறை மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழு இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் எந்த விவரமும் அச்சிடாமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்டுகளில் இருக்கும் தகவல்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருக்கும் என்பதால், இந்த முடிவு ஏற்கெனவே உள்ள நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், பாஸ்போர்ட்டுகளில் உள்ள அடையாளப்படுத்தும் குறியீடுகள் மூலம் அந்தத் தகவல்களை அதிகாரிகளால் சோதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதுபோல, பாஸ்போர்ட்டுகளின் நிறத்தை ஊதாவிலிருந்து, ஆரஞ்சுக்கு மாற்றவும் மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய பாஸ்போர்ட்டுகள் மூன்று நிறங்களில் இதுவரை வழங்கப்பட்டு வருகின்றன. அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிற பாஸ்போர்ட்டும் வெளிநாடுகளில் தூதர்களாகப் பணிபுரிபவர்களுக்கு சிவப்புப் நிறத்திலும் மற்றவர்களுக்கு ஊதா நிறத்திலும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படு வருகின்றன. இதில், ஊதா பாஸ்போர்ட்டுகளின் நிறத்தை மட்டுமே மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!