வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (13/01/2018)

கடைசி தொடர்பு:15:20 (13/01/2018)

"பிரச்னைகளைக் கண்டு பயந்து ஓடக்கூடாது" - விவேகானந்தர் !

விவேகானந்தர், vivekanandar

இப்பூவுலகில் அதர்மம் தலைதூக்காமல் இருக்கவும், தர்மத்தின் மீதான பற்றுதல் அதிகரிக்கவும் அவ்வப்போது மகான்கள் சிலர் தோன்றி மறைகிறார்கள். அதுபோன்ற மிகச்சிறந்த மகான்களில், இந்தியா மற்றும் இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் உயரே தூக்கி நிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர் ஆவார்.

இந்தியாவில் தான் வாழ்ந்த காலக்கட்டத்தில் சமயப்பற்றை விடவும் நாட்டுப்பற்று மிகவும் முக்கியம் என்பதை நன்று உணர்ந்திருந்தவர். தன் அயராத உழைப்பின் மூலம் அதைச் செயல்படுத்தியும் காண்பித்தவர். அவர்தான் விவேகானந்தர். இவர், 1863-ம் ஆண்டு, ஜனவரி 12-ல் பிறந்தார். அவரின் இயற்பெயர் 'நரேந்திரநாத் தத்தா' சிறுவயதில் மிகவும் குறும்புத்தனம் கொண்டவராகத் திகழ்ந்தார், இதன் காரணமாக, ஒருமுறை அவரை, தாயார் ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டார். அப்படியிருந்தும் அந்த அறையில் இருந்த பொருள்களையும், தனது உடைகளையும் அறையின் ஜன்னல் வழியாக யாசகம் கேட்போருக்கு வெளியே வீசினார் விவேகானந்தர். 

தனது கல்வியை முடித்ததும் விவேகானந்தருக்கு துறவறம் மீது பற்று வந்தது. அதை தன் தாயிடம் தெரிவித்ததும், கத்தி ஒன்றை எடுத்துவருமாறு தாய் கூறினார். விவேகானந்தரும் கத்தியை எடுத்துவந்தார். ஆனால், அவரது தாயாரோ, 'இன்னும் உனக்கு துறவறம் மேற்கொள்வதற்கான பக்குவம் ஏற்படவில்லை' என கூறி விட்டார். ஒவ்வொருமுறை விவேகானந்தர் துறவறம் பற்றி பேச்சு எடுக்கும் போதல்லாம் கத்தியை எடுத்துவருமாறு அவரின் தாயார் கூறுவார். பிறகு அவருக்குப் பக்குவம் வரவில்லை எனக்கூறி நிராகரித்து விடுவார். ஆனால், அதுபோன்று கேட்டபோது, விவேகானந்தரின் துறவறத்துக்கு அவரின் தாயார் சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனால், அவருக்கு மிகுந்த சந்தேகம் எழவே, அதைத் தன் தாயிடமே வினவினார். அதற்கு அவரின் தாயாரோ "துறவறம் மேற்கொள்பவர்கள், அடுத்தவர்களின் துன்பத்தை தன் துன்பமாக எண்ணிச் செயல்பட வேண்டும். ஒவ்வொருமுறை நீ என்னிடம் கத்தியை எடுத்துவந்து கொடுக்கும்போதும், அதன் கூர்மையான பகுதி, என்னை நோக்கி திருப்பி இருக்குமாறு தருவாய். ஆனால், இம்முறை கத்தியின் கைப்பிடி இருந்த பகுதியை என்னிடம் தந்தாய். இதன்மூலம் உனக்கு துறவறம் மேற்கொள்வதற்கான தகுதி வந்துவிட்டது எனத் தெரிகிறது. ஆகையால் தற்போது நீ கிளம்பலாம்" என்றார். 

vivekanandar, விவேகானந்தர்

விவேகானந்தரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது, 1893-ம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரைதான். இந்தியாவில் இருந்து இந்து மதப் பிரதிநிதியாக சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொண்டார். "சகோதர, சகோதரிகளே" என்று அவர் தன் உரையை ஆரம்பித்த உடனேயே பலத்த கரவொலி எழுந்து, அது அடங்க வெகுநேரமாயிற்று. விவேகானந்தர் அந்த மாநாட்டில் நிகழ்த்திய உரை இந்து மதத்தின் பெருமையை உலக நாடுகளிடையே பறைசாற்றும் வகையில் அமைந்தது. 

'எக்காரணத்தைக் கொண்டும் தைரியத்தை விட்டுவிடக் கூடாது' என்பதை விவேகானந்தர் தன் உரைகளின் மூலம் உலகுக்கு எடுத்துரைத்து வந்தார். 

ஒரு நிகழ்ச்சியை அதற்கு உதாரணமாகப் பார்ப்போம். விவேகானந்தர், அவரின் நண்பர் மற்றும் நண்பரின் மனைவி என மூவரும் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு காளை அவர்களை நோக்கி மூர்க்கமாகப் பாய்ந்து வந்தது. அதைக் கண்ட நண்பரின் மனைவி மயக்கமடைந்துவிட்டார். நண்பரோ தலைதெறிக்க ஓடினார். ஆனால், விவேகானந்தரோ தான் நின்ற இடத்திலேயே நிலையாக நின்றிருந்தார். சீறி வந்த காளையானது, விவேகானந்தரையும் அவர் நண்பரின் மனைவியையும் விட்டுவிட்டு ஓடுகின்ற நண்பரைத் துரத்த ஆரம்பித்துவிட்டது. இந்தச் சம்பவத்தை முன்னிறுத்தி 'எந்தவொரு பிரச்னையையும் கண்டு நாம் பயந்து ஒதுங்கினால், அது நம்மைத் துரத்தும். நாம் பிரச்னைகளை எதிர்த்து நின்றோமானால் அவை நம்மை விட்டு விலகிச் சென்றுவிடும்' என விவேகானந்தர் கூறினார்.

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே இருக்கிறது" என்னும் விவேகானந்தரின் கூற்றுக்கிணங்க, "சிற்றின்பத்தைத் தவிர்த்து மெய்ஞான இன்பத்தை அடைய பாடுவோம்." 


டிரெண்டிங் @ விகடன்