மும்பையில் 7 பேருடன் கடலில் விழுந்த ஹெலிகாப்டர்...! 4 பேர் உடல் மீட்பு

மும்பையில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஹெலிகாப்டர்

 

 மும்பை புறநகரிலுள்ள ஜுகு விமான நிலையத்திலிருந்து இன்று காலை 10.14 மணிக்கு பவான் ஹன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் புறப்பட்டது. அதில் ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் 5 பேர் மற்றும் இரு பைலட்கள் இருந்தனர். அங்கிருந்து கிளம்பி ஒரு எண்ணெய்க்கிணறை பார்வையிடுவதாக அவர்கள் திட்டம் வைத்திருந்தனர். 

ஹெலிகாப்டர் மும்பை கடற்கரையிலிருந்து கடலில் 50 கிலோ மீட்டர் தொலைவில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது நேரம் காலை 10.30 மணி. 11 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் குறிப்பிட்ட இடத்தைச் சென்று அடைந்திருக்க வேண்டும். ஆனால், ஹெலிகாப்டரைக் காணவில்லை. இதனால், அது கடலில் விழுந்து விபத்தில் சிக்கியிருக்க வேண்டும் என்று ஊகிக்கப்பட்டது.

இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஒரு டோர்னியர் ரக விமானம் மற்றும் ஒரு கப்பல் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சிறிதுநேர தேடுதலுக்குப்பின் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டன. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!