வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (13/01/2018)

கடைசி தொடர்பு:21:55 (13/01/2018)

கொளத்தூரில் கொள்ளையடித்துத் தப்பிய நாதுராம் குஜராத்தில் கைது!

நாதுராம்

கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையை அடுத்த கொளத்தூரில்  உள்ள   முகேஷ்குமாரின் நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. நகைக்கடையின் மேல்தளத்தில் துளையிட்டு கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம்குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கொள்ளை நடந்த இடத்திலிருந்து கிடைத்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்கள்குறித்த தகவல் கிடைத்தது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலக் கொள்ளையர்கள் என்று போலீஸாருக்குத் தெரிந்ததும் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளைக் கூட்டத் தலைவன் நாதுராமைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராம்புர்கலான் கிராமத்துக்குச் சென்றனர்.

ராஜஸ்தான் சென்ற தமிழக போலீஸார் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில், தனிப்படையில் இடம்பெற்றிருந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குண்டுபாய்ந்து உயிரிழந்தனர். கொள்ளையர்கள் சுட்டதால் அவர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது.அப்போது இந்தச்சம்பவம் நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை நினைவுறுத்துவதாக அந்தச் சமயத்தில் பேசப்பட்டது. பெரும் விவாதம் எழுந்தது. பின்னர், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சகபோலீஸ் அதிகாரியின் துப்பாக்கிக்குண்டு தவறுதலாகப் பாய்ந்ததால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது. }

தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் குஜராத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.