வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (14/01/2018)

கடைசி தொடர்பு:16:30 (14/01/2018)

இந்திய தூதரின் ட்விட்டர் கணக்கை முடக்கிய பாகிஸ்தான் ஆதரவாளர்கள்!

ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை அடையாளம் தெரியாத நபர்கள் முடக்கினர். 


சையது அக்பருதீனின் ட்விட்டர் கணக்கை இன்று அதிகாலையில் முடக்கிய மர்ம நபர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்களைப் பதிவிட்டனர். மேலும், பாகிஸ்தான் கொடி மற்றும் அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹீசைனின் படங்களையும் அவர்கள் பதிவிட்டனர். அதேபோல், அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளுக்கு அளிக்கப்படும் புளூ டிக்-கும் ஹேக் செய்யப்பட்டிருந்த நேரத்தில் இல்லை. ஹேக்கர்களின் பதிவில் துருக்கியின் வலிமையையும் விரைவில் காண்பீர்கள் என்று பதிவிடப்பட்டிருந்தது. இதனால், துருக்கியைச் சேர்ந்த பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்கள், அவரது ட்விட்டர் கணக்கை முடக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சில மணி நேரங்களில் சையது அக்பருதீனின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. அவரது கணக்கை முடக்கியது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.