வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (14/01/2018)

கடைசி தொடர்பு:23:00 (14/01/2018)

உச்ச நீதிமன்ற விவகாரம்: தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வுபெற்ற 4 நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். 
 

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று கூறி மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகிய 4 நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். தலைமை நீதிபதிக்கு எதிராகப் பணியில் இருக்கும் நீதிபதிகள் வெளிப்படையாகப் பேசுவது உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாகும். இந்தநிலையில், முக்கிய வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருக்கும் மூத்த நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று கூறி ஓய்வுபெற்ற நீதிபதிகள் 4 பேர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். 

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு மற்றும் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹெச்.சுரேஷ் ஆகியோர் அந்த கடிதத்தை எழுதியுள்ளனர். அதில், ‘வழக்குகளை ஒதுக்குவதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே முழு அதிகாரம் இருக்கிறது என்று கூறிய அந்த 4 நீதிபதிகளின் கருத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதற்காக, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூனியர் நீதிபதிகளுக்கு ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. 

இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாண்டு, தீர்வு காண வேண்டும். வழக்குகளை ஒதுக்குவதற்கான உரிய விதிமுறைகளை முன்வைக்க வேண்டும். நீதித்துறை மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்பதற்காக, இதை உடனடியாகச் செய்ய வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும் வரை, முக்கியமான வழக்குகளை (நிலுவையில் வழக்குகளையும் சேர்த்து) உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் உள்ள 5 மூத்த நீதிபதிகளுக்கு மட்ட்மே ஒதுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளே உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுகிறது என்பதைக் காட்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.