வேலை கொடுப்பவர்களாக மாறுங்கள்! இளைஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் அறிவுரை

'நம் நாட்டின் இளைஞர்கள், வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்' என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம், தானே அருகில் உள்ள உத்தன் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘இளைஞர்களிடம் இருக்கும் திறன், அவர்களை வேலைவாய்ப்பு அளிப்பவர்களாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, வேலைதேடுபவர்களாக அல்ல. மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பவர்களாக இளைஞர்கள் உருவெடுக்க வேண்டும்’ என்றார். 

மராத்தியில் வணக்கம் கூறி பேச்சைத் தொடங்கிய அவர், நவீன இந்தியாவுக்கு அம்பேத்கரின் சமூக-பொருளாதாரக் கொள்கைகள் அவசியம் குறித்துப் பேசினார். அவர் கூறுகையில், ‘சமூக-பொருளாதார ஜனநாயகம் என்பது நமது அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக அமையும். நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும்’ என்றார். மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தைப் பாராட்டிய குடியரசுத் தலைவர், இலவசமாக வங்கிக் கணக்குகள் தொடங்கும் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 30 கோடி வங்கிக் கணக்குகளில் 52 சதவிகிதத்துக்கும் மேலான கணக்குகள், பெண்களால் தொடங்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!