வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (15/01/2018)

கடைசி தொடர்பு:17:30 (15/01/2018)

ஆதார் பெறும்போது இனி முக அடையாளமும் சேகரிக்கப்படும்!

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களிடம், முக அடையாளத்தையும் பெற ஆதார் ஆணையம் முடிவுசெய்துள்ளது. 

ஆதார்


அரசின் சமூக நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது. இதற்கிடையே, பிறரின் ஆதார் விவரங்கள் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பியது. இதையடுத்து, ஆதாரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில், 'விர்ச்சுவல் ஐ.டி' என்ற புதுப் பாதுகாப்பு நடைமுறை அறிமுகம்செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆதார் பெற விண்ணப்பிப்பவர்களிடம் முக அடையாளங்களைப் பெற ஆதார் ஆணையம் முடிவுசெய்துள்ளது. இப்போது, பயோமெட்ரிக் முறையில் விண்ணப்பதாரரின் கைரேகை, கண் விழித்திரை ஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுவந்தன. இனி, முக அடையாளமும் சேகரிக்கப்படும். வரும் ஜூலை மாதத்திலிருந்து இது நடைமுறைக்கு வரும். சிலருக்கு கைரேகை தேய்ந்து போயிருக்கும். அவர்களிடம் கைரேகை பெறமுடியாத நிலையில், முக அடையாளத்தைப் பெறுவது  ஆதார் பெறும் நடைமுறைகளை எளிதாக்கும் என்று ஆதார் ஆணையம் கூறியுள்ளது.