வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (16/01/2018)

கடைசி தொடர்பு:10:16 (16/01/2018)

ஆதார் எண்ணுக்கு மாற்றாக வரும் விர்ச்சுவல் ஐடி எண் சாமானியனுக்கு புரியுமா?

இந்த டிஜிட்டல் இந்தியா உருவாக்கத்தில், ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான சிக்கலைச் சந்திப்பதே மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆதார் அட்டை, பணமதிப்பிழக்கம், ஜி.எஸ்.டி எனப் புதுப்புது விஷயங்களை மக்கள் மீது திணித்துவரும் மத்திய அரசு, தற்போது  விர்ச்சுவல் ஐடி கார்டு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆதார்

`அனைத்து சேவைகளுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்'  என்ற அறிவிப்பே சராசரி மக்களைப் பெரிதும் தண்டிப்பதாக அமைந்துவிட்டது. இதற்காக அவர்கள் அலைந்து திரிந்து, குழம்பி திரிவதைப் பார்த்த உச்ச நீதிமன்றமே அதற்கான இறுதித் தேதியைத் தள்ளிப்போட்டுவிட்டது. அதுமட்டுமல்லாமல், ஆதார் மூலமாக தனிநபர் ரகசியங்கள் திருடு போகக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. பணமதிப்பிழக்கம் முடிந்துபோனாலும், மீண்டும் 2,000 ரூபாய் நோட்டு செல்லாததாக அறிவிக்கப்படலாம் என்ற எண்ணம் பரவலாக மக்களிடையே இருக்கிறது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லாதென்று வங்கிகளே மக்களைக் குழப்பியடிக்கும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.

ஜி.எஸ்.டி-யிலும் நிறைய சிக்கல்கள். ஜி.எஸ்.டி-யைக் காரணம் காட்டி விற்பனைத் துறையிலும் விலையேற்றி மக்களைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளினர். சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் ஜி.எஸ்.டி பதிவுமுறையில் ஏகப்பட்ட குழப்பங்கள். புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு கூடுதல் சவாலாக ஜி.எஸ்.டி நடைமுறை. தற்போது... ஆதார் கார்டில் கூடுதலாக விர்ச்சுவல் ஐடி எனும் கூடுதல் அம்சத்தை இணைக்கவுள்ளனர். இதன்மூலம் ஆதார் கார்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இதுவரை இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 88.5 சதவிகித மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,16,45,28,377 இந்தியர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆதார் அட்டையை மொபைல் எண், ஸ்மார்ட் கார்டு, இன்ஷூரன்ஸ் பாலிசி எனப் பல்வேறு சேவைகளுடன் இணைக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இணைப்பதன் மூலம் தனிநபர் ரகசியங்கள் களவாடப்படும் அச்சம் எழுந்துள்ளது. அதற்கேற்ப வெறும் 500 ரூபாய்க்கு தனிநபர்களின் ஆதார் எண் விவரங்கள் கைமாற்றப்படும் புகார்கள் கிளம்பின. இந்தச் சூழலில் ஆதாரின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவேண்டிய கட்டாயம் இந்திய தனிநபர் அடையாள ஆணையத்துக்கு (UIDAI) ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக கொண்டுவரப்பட்டதுதான் விர்ச்சுவல் கார்டு திட்டம். 

ஆதார்

இந்த விர்ச்சுவல் கார்டு எனப்படும் `மெய்நிகர் அட்டை'யில் 16 இலக்க எண்கள் இருக்கும். இந்த எண்களை தனிநபர் அடையாள ஆணையத்தின்  (https://uidai.gov.in/) இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. புதிதாக மொபைல் எண் வாங்குவதாக இருந்தால், அங்கே ஆதார் எண் கேட்கப்படும். அந்தச் சூழலில் அந்த இணையதளத்தின் மூலம் விர்ச்சுவல் ஐடியை உருவாக்க வேண்டும். மொபைல் எண் வாங்கும்போது ஆதார் எண்ணுக்குப் பதிலாக விர்ச்சுவல் ஐடி எண்ணைத் தெரிவித்தாலே போதும். அவர்கள் அந்த எண்ணையும் பயோமெட்ரிக் பதிவையும் சேர்த்து UIDAI அமைப்புக்கு அனுப்பி சரிபார்ப்பார்கள். ஆக, ஒருவரின் ஆதார் எண் வெளியே தெரிய வாய்ப்பிருக்காது. அதேபோல் இந்த விர்ச்சுவல் ஐடி எண்ணை எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் புதிதாக உருவாக்கிக்கொள்ளலாம். அப்படி உருவாக்கும்போது ஏற்கெனவே பயன்படுத்திய எண் காலாவதியாகிவிடும். இந்த விர்ச்சுவல் ஐடி எண்ணை, சம்பந்தப்பட்டவர் தவிர மற்றவர்களால் உருவாக்க முடியாது.

இந்தச் செயல்பாட்டுமுறை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஏ.டி.எம் மையங்களில் பணத்தை எடுக்கவே இன்னொருவரின் உதவியை எதிர்பார்க்கும் பெரும்பான்மை மக்களைக்கொண்ட இந்தியச் சமூகத்தில், இணையத்தில் ஒவ்வொரு முறையும் விர்ச்சுவல் ஐடி-யை உருவாக்குவது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியமாகும் என்பதும், இந்த விர்ச்சுவல் ஐடி எண்ணும் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதும் போகப்போகத் தெரியும்.


டிரெண்டிங் @ விகடன்