அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்? | Future of jobs in Automobile... Survey result

வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (17/01/2018)

கடைசி தொடர்பு:10:03 (17/01/2018)

அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்?

காலம் மாறமாற பல தொழில்நுட்பங்களும், இணையச் சேவைகளும் முன்னேறிக்கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்குத் தொழில்நுட்பம் டாப் கியரில் செல்கிறது. முன்பெல்லாம் 20 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்திருப்பார்கள், தற்போது 2 வருடத்துக்கு ஒருமுறை நிறுவனத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வேகமான காலச் சூழலில் ஆட்டோமொபைல் துறையில் வேலை செய்பவர்கள் 2022-க்குள் பிரேக் போட்டு பாதையை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாகச் சொல்கிறது ஏர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst & Young) நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு.

ஆட்டோமொபைல்

வர்த்தகம் - தொழில்துறை இந்திய சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FICCI) மற்றும் நாஸ்காம் (NASSCOM) உடன் இனைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் உலகமயமாக்கல், மக்கள்தொகை, அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை எவ்வகையில் பொருளாதார சூழலை மாற்றப்போகிறது என்றும், அதற்கேற்ப எந்தத் திறனை அடிப்படையாகக் கொண்டு ஆட்டோமொபைல் துறையில் புதிய வேலைகள் உருவாகப் போகிறது என்றும் தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர்களிடமும், துறை சார்ந்த முக்கிய நிர்வாகிகளிடமும் எடுக்கப்பட்ட இக்கருத்துக்கணிப்பில், ஆட்டோமொபைல் துறையில் அனைத்து கார்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட உதவும் இணையத் தொழில்நுட்பமும், அதனைத் தொடர்ந்து உருவாக இருக்கும் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று 70 சதவிகித நிர்வாகிகள் கூறியுள்ளனர். 55 சதவிகிதத்தினர் பிக் டேட்டா எனும் தொழில்நுட்பமும், மேகக் கணிமை (Cloud computing) எனும் தொழில்நுட்பமும் இத்துறையை மேம்படுத்த முக்கியமானவை என்றனர்.

ஆட்டோமொபைல்

தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, பெயின்டிங் மற்றும் வெல்டிங் வேலைகளை முழுவதும் ரோபோக்களே செய்துவிடும் என்பதால் இந்த வேலைகளுக்கான தேவை எதிர்காலத்தில் அழிந்துவிடும். ஆனால், ரோபோ நிரலாக்கம் (Robotics programming) மற்றும் ரோபோக்களின் பராமரிப்புப் பணிக்கு அதிக தேவை உருவாகும் என்றும் சொல்கிறார்கள். மேலும், ஆட்டோமொபைல் துறையில் வேலைசெய்யும் 50 முதல் 55 சதவிகிதத்தினர் முற்றிலும் புதிய வேலைகளைச் செய்ய நேரிடும் என்றம் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஆட்டோமோடிவ் உற்பத்தியாளர்கள், ஷாப் ஃப்ளோர் முழுவதும் ரோபோவை பயன்படுத்த முயற்சிசெய்து வருவதாகவும் இதுவரை வெல்டிங், ப்ரஸ், காஸ்ட் மற்றும் பெயின்ட் ஷாப்பில் 70 முதல் 100 சதவிகிதம் தானியங்கியாக மாற்றப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளனர். 2020-ல் இந்த வேலைகள் அனைத்தும் முழுமையாக மனித கைகள் படாமல் தானியங்கியாக மாற்றப்பட்டுவிடும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது. 

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல் துறையில் ஆண்டுக்கு 2 முதல் 2.5 சதவிகித வேலைவாய்ப்புகள் உருவாகி 2020-ல் 14 லட்சம் தொழிலாளர்கள் உருவாவார்கள் என்றும் 2022-ல் 60 முதல் 65 சதவீத வேலைகளுக்கு புதிய திறன் தேவைப்படும் என்றும் கூறுகிறது இந்தக் கருத்துக்கணிப்பு. தற்போது தொழிற்சாலையில் உள்ள அசெம்பிளி பிளான்ட்டில் 30 சதவிகிதம் இருக்கும் தானியங்களின் பங்கு 2022-ல் வரை அதே நிலையில்தான் இருக்கும். ஆனால், பாடி ஷாப்பில் தானியங்கிகளின் பங்கு 95 சதவிகிதத்திற்கும் அதிகமாகிவிடும் என்றும் தெரியவந்துள்ளது. Connected car. பிக் டேட்டா மற்றும் Cloud computing தொழில்நுட்பங்கள் கார்களில் அறிமுகமாக உள்ளதால் அதற்கேற்ப இயக்கம், வடிவமைப்பு மற்றும் இதர முக்கிய வேலைகளுக்கும் இன்னும் 5 வருடங்களில் புதிய திறன்கள் தேவைப்படும் எனவும் இந்த கருத்துக்கணிப்பு சொல்கிறது. 

ஆட்டோமொபைல் அனலெடிக்ஸ் என்ஜினீயர், முப்பரிமாண அச்சு தொழில்நுட்பவியலாளர் (3D printing), இயந்திர கற்றல் - இணையப் பாதுகாப்பு நிபுணர் மற்றும் இயற்கை தொழில்நுட்பங்களை இத்துறையில் ஒருங்கிணைக்கும் Sustainability integration expert என்று சில புதிய பணிகள் உருவாகவிருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்