வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/01/2018)

கடைசி தொடர்பு:19:00 (17/01/2018)

`அனைத்து விதமான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்!' - ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 விதமான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

RBI

மத்திய அரசு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பைக் கொண்டு வந்ததையடுத்து, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதையடுத்து, 10 ரூபாய் நாணயங்களும் இனி செல்லாது என வாட்ஸ் -அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதனால், அரசுப் பேருந்துகள் தொடங்கி அரசின் அனைத்துத்துறைகளும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தன. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். அதனால், புழக்கத்தில் உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்றும், நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம் என்றும் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அப்போதே அறிவித்தது. அதேபோல, 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-ன் கீழ் தேசத் துரோக வழக்கைப் பதிவுசெய்யலாம் என்றும் உத்தரப்பிரதேச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆயினும், பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதில் குழப்பம் நீடித்து வந்த்து. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, `இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்' என்று அறிவித்துள்ளது.