ரோஹித் வெமுலா மரணம் கற்றுத் தரும் பாடம் என்ன? #RememberingRohithVemula

rohit vemula, ரோஹித் வெமுலா

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ரோஹித் வெமுலாவின் மரணம் நேற்று நிகழ்ந்தது போல இருக்கிறது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. சில மாதங்களுக்கு முன், ரோஹித்தின் தம்பி ராஜா வெமுலாவிற்கு மகன் பிறந்து இருக்கிறான். ‘ரோஹித் வெமுலா’ என பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கின்றது அந்தக் குடும்பம். வட இந்தியாவின் பெரும்பாலான தலித் உரிமைப் போராட்டங்களில் பங்கேற்கும் முக்கியப் பேச்சாளராக ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா இருக்கிறார். அவரது பேச்சும், செயல்பாடுகளும் இன்னும் தன் மகனின் மரணத்திற்கான நீதியைத் தேடியபடியே அமைந்துள்ளன.

ரோஹித் வெமுலாவின் தற்கொலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வாலின் அறிக்கை வெளியானது. அதில் 'ரோஹித் வெமுலா தலித் அல்ல' என்று அவர்  கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், "ரோஹித் சிறுவயதிலிருந்தே தனிமையை விரும்புபவராக இருந்துள்ளார்; அதுவே, அவருக்குக் கடும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. அதனால், அவர் சுயமுடிவின் அடிப்படையிலேயே தற்கொலை செய்திருக்கலாம்" என்றும் நீதிபதி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார். நீதிபதி ரூபன்வாலின் அறிக்கையில் யாரும் குறைசொல்லவில்லை; உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி வேற்றுமைகளைக் களைய எந்தவிதமான பரிந்துரைகளும் அதில் கூறப்படவில்லை.

இன்னும் சுருங்கச் சொன்னால், 'ரோஹித் மரணத்தில் சாதி வேறுபாடு பங்காற்றவில்லை எனவும், பாரதிய ஜனதா கட்சிக்கு இதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை' எனவும் முன் வைக்கிறது அந்த அறிக்கை. 

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ரோஹித் வெமுலா, பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். தேர்தல் அரசியலில் ஈடுபடும் இடதுசாரிக் கட்சி ஒன்றின் மாணவர் அமைப்பில் பணியாற்றி, அதில் சாதிய வேறுபாடு நிலவுகிறதென்று, பிரிந்துவந்து அம்பேத்கர் மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டவர். காரல் சாகன் முதலான அறிஞர்களையும் முன்னோடியாக ஏற்றுக் கொண்டவர்.

பல்கலைக்கழகத்தில் மாணவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதில் முழு மூச்சோடு செயல்பட்டு வந்தார் ரோஹித். பி.ஜே.பி-யின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலும், அதன் பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம், அவருக்கு எதிராகச் செயல்பட்டதும், போராட்டத்தின் மற்றொரு வடிவமாகத் தன் உயிரைத் துறப்பதைத் தேர்ந்தெடுத்தார்.

ரோஹித், rohit vemula

இந்தியா முழுவதும் மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது இன்று பெருமளவில்  குறைந்து வருகிறது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தை வெளியிட்ட மத்திய அரசு, அதில், 'மாணவர்கள் கல்வி நிறுவன வளாகத்திற்குள் அரசியல் பேசக் கூடாது' என்பதை ஒரு அம்சமாகச் சேர்த்துள்ளது என்பதை இதனோடு பொருத்திப் பார்க்க முடியும்.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியமைத்த சில நாட்களிலேயே, இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் முற்போக்கான மாணவர் அமைப்புகள் கடும் நெருக்கடிக்குள்ளாயின. அம்பேத்கர் பெயரைத் தாங்கிய மாணவர் அமைப்புகள், பி.ஜே.பி-யின் தலித் வாக்கு வங்கிக்கு இடையூறாக அமையும் என்ற நோக்கத்தில் நடவடிக்கைகளுக்கு உள்ளாகின. புனே திரைப்படக் கல்லூரியில் அம்பேத்கர் பெயரில் இயங்கிய மாணவர் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி-யில் இருக்கும் ‘அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம்' தடை செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருக்கும் மாணவர் அமைப்புகளுக்கும், இதே நிலைதான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல; தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் உள்ள 'அம்பேத்கர்-பெரியார் அமைப்பு' மாணவர்களும் நிர்வாகம் தரும் அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர்.

மாணவர்களை அரசியலில் ஈடுபடுத்துவது ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதை ஆட்சியாளர்களும், ஆசிரியர்களும் உணரவேண்டும். சரியான அரசியல் பாதையை மாணவர்கள் தேர்ந்தெடுத்து, தங்களின் உரிமைகளுக்காகப் போராடினால் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய வேற்றுமைகளைக் களைவது எளிதாக இருக்கும்.

உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் மீது திணிக்கப்படும் சாதிய வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் இறந்த கடைசி உயிராக ரோஹித் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகும் உயிர்கள் போய்கொண்டுதான் இருக்கின்றன.

ராதிகா வெமுலா ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் முன் வைக்கும், "ரோஹித் வெமுலா பெயரில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்; கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் மீதான பாகுபாடுகளுக்கு எதிராகவும், சட்டத்தின் பெயரில் மாணவர்களைக் காப்பாற்றவும் அது தேவையாகிறது" என்ற கருத்து இன்றியமையாததாகிறது.

ரோஹித் வெமுலாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், ஜனவரி 17-ல் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் வீதிகளில் இறங்கி ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத போராட்டங்களை நடத்தினர். ஜல்லிக்கட்டுக்காக கூடிய மாணவர்களும், இளைஞர்களும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்.

ரோஹித் வெமுலாவின் குறிப்புகள் குறுநூலாக தொகுக்கப்பட்டு, ‘சாதி ஒரு வதந்தி அல்ல’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தலைப்பிற்கேற்ற வகையில், மாணவர்கள் சாதிக்கு எதிராக செயலாற்ற முன்வரவேண்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!