ஹெல்மட் இல்லைன்னா பூஜை இல்லை...! பூசாரிகளின் கிடுக்கிப்பிடி

‘பொய் சொல்லாதே...' என்று சிறுபிள்ளைகளிடம் சொன்னால் கேட்பார்களோ இல்லையோ, ‘பொய் சொன்னா, சாமி கண்ணைக் குத்திடும்' எனச் சொன்னால் நிச்சயம் கேட்பார்கள். கடவுள் மீது மனிதனுக்கு உள்ள இந்தப் பயத்தையும் பக்தியையும் வைத்து மக்களை ஹெல்மெட் பயன்படுத்தத் தூண்டுகிறார்கள் ஒடிஸா மாநிலப் பூசாரிகள். ஒடிஸாவில் ஜகத்சிங்பூர் என்ற இடத்தில் `மா சரலா' கோயில் உள்ளது. ஆயிரம் வருடங்கள் பழைமையான இந்தக் கோயிலைச் சுற்றி உள்ள பல்வேறு இடங்களிலிருந்து தினமும் பல நூறு மக்கள் வந்து செல்கின்றனர். சென்னைக்கு எப்படி பாடிகாட் முனீஸ்வரனோ, அப்படித்தான் ஒடிஸாவில் `மா சரலா'.

மா சரலா கோயில்

இந்தக் கோயிலுக்கு வருபவர்களில் 10 முதல் 50 பேர் தங்களின் வாகனங்களுக்குப் பூஜை போடுவதற்காக வருகின்றனர். ஒரு கணக்கெடுப்பின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்ட ஜகத்சிங்பூர் போலீஸார், “பைக்குக்கு பூஜை போட வருபவர்கள் ஹெல்மெட் இல்லாமல் வந்தால், வாகனங்களுக்கும் அவர்களுக்கும் நீங்கள் எந்த உதவியும் செய்யக் கூடாது. வண்டியுடன் ஹெல்மெட் இருந்தால் மட்டுமே, பூஜைக்குரிய அத்தனை முன்னேற்பாடுகள் மற்றும் சடங்குமுறைகளைப் பின்பற்றி தெளிவான சிந்தனையுடன் பூஜை நடத்தி சிறப்பிக்க வேண்டும். அப்படி இல்லாத வகையில், அவர்களை ஒரு பொருட்டாகவே கருத வேண்டாம்” என அந்தக் கோயில் பூசாரிகளை அழைத்துச் சொல்லியுள்ளனர். 

பூசாரிகளும் அந்த மாநிலக் காவல் துறையினரின் கட்டளைக்கு ஏற்ப, போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்ட அனைத்து சான்றிதழ்களுடன் ஹெல்மெட்டும் கட்டாயம் இருந்தால் மட்டுமே பூஜை மேற்கொள்கின்றனர்.

ஒடிஸாவில் பதிவாகும் மொத்த வாகனங்களில் 94 சதவிகிதம் இருசக்கர வாகனங்கள்தான். ஆனால், ஹெல்மெட் பயன்பாடு 50 சதவிகிதம்கூட இல்லை. அதிகரித்துவரும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கு ஒவ்வொரு மாநிலமும் புதிதாக ஏதேனும் முயற்சி செய்துவருகிறது. அந்த வகையில் ஒடிஸா போலீஸார் ஜகத்சிங்பூர் கோயில் பூசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்களுக்குப் பூஜை செய்ய வருபவர்கள் ஹெல்மெட்டுடன் வந்தால் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.

helmet

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இரண்டு வருடங்களுக்குள் சாலை விபத்துகளை 50 சதவிகிதம் குறைப்பதாக ஐ.நா சபையில் உறுதியளித்துள்ளார். இதற்காக அனைத்து மாநிலங்களும் ஹெல்மெட் பயன்பாட்டை ஊக்குவிக்க ஊடகங்களில் விளம்பரங்களைத் தருவது, தெருக்களில் பிரசாரம் செய்வது, ஹெல்மெட் இல்லாதவருக்கு அபராதம் விதிப்பது, விபத்து ஏற்படுத்துபவரின் ஓட்டுநர் உரிமத்தைத் தகுதிநீக்கம் செய்வது என, பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஒடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை வசதி (ஐ.டி.எம்.எஸ்) அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை, சிக்னல்களில் உள்ள சிசிடிவி உதவியுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே நேரடியாகக் கண்காணிக்க முடியும்; விதிகளை மீறுவோரைக் கண்டறிந்து தண்டனையும் அளிக்க முடியும். 

தொழில்நுட்பத்தை மட்டும் நம்பியிருக்காமல் கடவுளின் உதவியையும் நாடுகிறது ஒடிஸா போலீஸ். மூடநம்பிக்கை என எதையும் விட்டுவைக்காமல், கிடைக்கும் இடத்திலெல்லாம் ஹெல்மெட்டை ஊக்குவிக்கும் முயற்சி, பாராட்டத்தக்கது மட்டுமல்லாமல்... பாடமாகவும் எடுத்துக்கொள்ளவேண்டியது.

பாடிகாட் முனீஸ்வரன் கோயில் பூசாரிகளே... நோட் பண்ணுங்கய்யா... நோட் பண்ணுங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!