` `பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது' - மாநில அரசுகளுக்குக் குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

`பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது' என்று மத்தியப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன. இது சம்பந்தமான வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பத்மாவத் படத்துக்குத் தடை விதிக்க முடியாது' என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

பத்மாவதி திரைப்பட போஸ்டர்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ரஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்.' ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். பல சர்ச்சைகளால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதல் ரிலீஸாக வேண்டிய படம், இன்னும் வெளிவராமல் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம், `அனைத்து மாநிலங்களும் இந்திய அரசியல் சட்ட சாசனம் கூறியுள்ளபடி சமூக அமைதியைப் பேண வேண்டும். மேலும், 'பத்மாவத்' திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது, அது சார்ந்த எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். தணிக்கைச் சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது' என்று கறார் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!