“என் நண்பன் மரணத்துக்குப் பிறகும் பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை!” - ரோஹித் வெமுலா நண்பர்

``ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பின் அடையாளத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. சில நேரங்களில் வாக்கு, சில நேரங்களில் எண், பலம், சில நேரங்களில் சில பொருள்கள் கூட அவனது அடையாளத்தை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால், நிச்சயமாக இல்லை. சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு.” -  நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் சென்றுவிட்ட ரோஹித் வெமுலாவின் கடைசி கடிதத்தில் காணப்பட்ட வரிகள் இவை. 

ரோஹித்

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் சக்ரவர்த்தி வெமுலா மறைந்து 23 மாதங்கள் கடந்துவிட்டன. அவரின் சகோதரரான ராஜா வெமுலாவுக்கு, இன்னொரு ரோஹித் வெமுலாவும் பிறந்துவிட்டார். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் சூழல் மாறியிருக்கிறதா. சிலரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது.

ரோஹித் வெமுலாவின் நெருங்கிய நண்பரும், ஹைதராபாத் ஈ.எஃப்.எல்.யூ பல்கலைக்கழக ஆய்வு மேசை உறுப்பினருமான சீத்தாராமுலு, ஹைதராபாத் பல்கலை நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வருபவர். ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்குப் பிறகு, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் சந்தித்திருக்கும் மாற்றங்கள்குறித்துப் பேசினார்.

``ரோஹித்தின் மரணத்துக்குப் பிறகும் பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. இறப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்ச குற்றவுணர்வும் கூட அவர்களுக்கு இருப்பதாக எங்களால் உணரமுடியவில்லை. ரோஹித்தின் நினைவு தினத்தில் நடக்கும் நிகழ்வுகளை படமெடுக்கவும்கூட விதிமுறைகள் இருக்கிறது. ஏன். மக்கள் இவற்றைப் பார்க்கக்கூடாதா? எதற்காக இந்த தேவையற்ற அச்சம். நீதி வழங்கப்படவில்லை. நம்பிக்கை வற்றிவிட்டது. நண்பர்களும், செயற்பாட்டாளர்களும், ரோஹித்தின் குடும்பமும் நீதி கிடைக்கவேண்டும் என்ற துளி விருப்பத்தோடு காத்திருக்கிறார்கள். தலித் மாணவர்களையும், அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் நடத்தும் விதத்தில் எந்த மாறுதல்களும் இல்லை. உதாரணமாக, சமீபத்தில் தலித் பேராசிரியர் லஷ்மி நாராயணாகுறித்து, மிக மோசமான வார்த்தைகளால் அவமதித்தார் ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த வரலாற்று ஆய்வு மாணவர் கரன் பல்சானியா. பேராசிரியர்களுக்கே இதுதான் கதி” என்றார்.

ஹைதராபாத் பல்கலைக்கழக மக்கள் தொடர்பியல் கல்வித்துறைப் பேராசிரியர் வினோத் பவரலா, `ஹைதராபாத் பல்கலைக்கழகம், சாதிய ரீதியான அடக்குமுறையின் இருப்பிடமாக ஊடகங்கள் காட்சிப்படுத்துவது எங்களை வருந்தச் செய்கிறது. மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தப் புகாரையும் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரிசல்களை சரிசெய்வதற்கான வேலைகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது’ என்றார்.

ஏ.பி.வி.பி மாணவர்களைத் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு, ரோஹித் வெமுலாவுடன் சேர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 5 மாணவர்களுள் ஒருவரான டோந்த ப்ரஷாந்த், `ரோகித் கூறியதைப்போல, ஒரு மனிதனை அவனது உடனடி அடையாளமாக இருக்கும் சாதிக்குள் சுருக்கும் வேலைகள் எங்கும் நிறைந்திருக்கிறது. ரோஹித் வெமுலாவின் நினைவு தினத்தை நாடு முழுவதும் பல இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அனுசரிக்கிறார்கள். ஆனால், ரோஹித் உயிரைப் போக்கிக்கொண்ட இந்த இடத்தில், அஞ்சலி செலுத்துவதற்குக்கூட ராணுவக் கட்டுப்பாட்டுகள்தான். ரோஹித் வெமுலாக்கள் இனிமேல் சாகக்கூடாதென்றால், சாதி எங்கெங்கெல்லாம் இயங்குகிறது என உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!