வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (19/01/2018)

கடைசி தொடர்பு:15:00 (19/01/2018)

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் தகுதி நீக்கம்? - டெல்லி அரசியலில் பரபரப்பு

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேருக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள பரிந்துரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கெஜ்ரிவால்


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த சில நாள்களில், இரட்டை ஆதாயப் பதவி என்னும் சிக்கல் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களுக்கு உருவானது. ஆம் ஆத்மி எம்.எம்.ஏ-க்களில் 20 பேர் பாராளுமன்றச் செயலாளர்களாகப் பதவி வகித்தனர். இது சட்டபடி தவறு; அதனால், எம்.எல்.ஏ-க்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று பிரஷாந்த் பட்டேல் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
தேர்தல் ஆணையமும் இதுபற்றி விசாரித்து வந்தது. இதுசம்பந்தமாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் அளித்த மனுக்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றமும் எம்.எல்.ஏ-க்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. இதை ஏற்று குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுத்தால், அதற்காக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கும். தேர்தல் ஆணையத்தின் இந்தப் பரிந்துரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.