வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (20/01/2018)

கடைசி தொடர்பு:21:00 (20/01/2018)

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

நீதிபதி பிரிஜ்பால் லோயா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. 


குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்தபோது போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்குகளை மும்பை நீதிமன்ற நீதிபதி பிரிஜ்பால் லோயா விசாரித்து வந்தார். அப்போது, வழக்கில் அமித்ஷா ஆஜராகாமல் தவிர்த்துவந்தபோது நீதிபதி லோயா கடுமை காட்டினார். வழக்கில் தீர்ப்பு 2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் லோதா, டிசம்பர் 1-ம் தேதி திடீரென உயிரிழந்தார். நாக்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அவருக்கு இதய முடக்கம் (கார்டியாக் அரெஸ்ட்) ஏற்பட்டு, அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. லோயாவுக்குப் பிறகு, பொறுப்பேற்ற நீதிபதி  எம்.பி.கோசவி அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு ஜூனியர் நீதிபதியான அருண் மிஸ்ரா அமர்வுக்கு மாற்றப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்தநிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.