நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு தீபக் மிஸ்ரா அமர்வுக்கு மாற்றிய பின்னணி என்ன?

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

குஜராத்தில் 2005ம் ஆண்டு நடந்த சொராப்தீன் போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா  2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் மர்ம மரணம் அடைந்தார். பி.ஜே.பி தலைவர் அமித்ஷா இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வெளியிடப்படும் நிலையில், நீதிபதி மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

மூன்று ஆண்டுகள் கழித்து, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லோயாவின் சகோதரி அனுராதா பியானி, 'தன் சகோதரரின் மரணம் இயற்கையானது அல்ல... அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது' என்று குற்றம்  சாட்டியிருந்தார்.  மகராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் லோனே என்பவர், 'நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 10-வது மூத்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.எம்.சந்திரகௌடர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே இது புகைச்சலை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மூத்த நீதிபதிகள் செலமேஸ்வரர், ரஞ்சன் கோகய், ஜோசப் குரியன், மதன் லோகுர் ஆகிய நான்கு நீதிபதிகள் லோயா மரணம் தொடர்பான வழக்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 'நீதிபதி லோயா வழக்கு சர்ச்சைக்குள்ளதாகி விட்டதால், நாங்கள் விசாரிக்க விரும்பிவில்லை' என்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சந்திரகௌடர் மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை வெளியிடப்பட்ட  உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைப் பட்டியலில், நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 22ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முன்னதாக, நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு நீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்க மகராஷ்ட்ர அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மகராஷ்ட்ராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தெக்ஷீன் பூனவாலாவும் நீதிபதி லோயா மரணம் குறித்து  விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வுக்கு மற்றப்பட்டுள்ளது. 

சில நாள்களுக்கு முன், நீதிபதி லோயாவின் மகன் அனுஜ், 'தன் தந்தையின் மரணம் இயற்கையானது ' என்று கூறியிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!