வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (22/01/2018)

கடைசி தொடர்பு:14:27 (22/01/2018)

எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் தகுதி நீக்கம்... வழக்கு தொடர ஆம் ஆத்மி முடிவு

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
 

Kejriwal


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர், அரசு செயலாளர்களாக பதவி வகித்தனர். இது பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. எம்.எல்.ஏ-க்கள், செயலாளர் பதவியில் இருப்பது இரட்டை ஆதாயம் பெறும் விஷயம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணையமும் இதுபற்றி விசாரித்துவந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட 20 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை வழங்கியது. இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக சட்ட அமைச்சகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேரும் பதவியிழக்கிறார்கள். அவர்களில் டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கோலாட்டும் ஒருவர்.

இது ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரிய பின்னடைவுதான் என்றாலும் அரசுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. ஏனெனில் டெல்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 இடங்களில் 66 இடங்கள் ஆம் ஆத்மியிடம்தான் இருந்தன. தகுதி நீக்கம் மூலம் 20 இடங்கள் குறைகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் கைலாஷ் கோலட் கூறியுள்ளார். சட்ட நடவடிக்கைகள்குறித்து ஆலோசித்து வருவதாக அவர் கூறியிருக்கிறார் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இடங்களுக்கு 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும்.