வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (22/01/2018)

கடைசி தொடர்பு:14:42 (22/01/2018)

உலக சுகாதார நிறுவனத்தின் காலண்டரில் இடம்பிடித்த இந்தியர் கீதா வெர்மா!

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 2018-ம் ஆண்டின் காலண்டரில், இமாசலப்பிரதேசத்தின் மன்டி மாவட்டத்தில் உள்ள சப்தோட் கிராமத்தைச் சேர்ந்த சுகாதார அலுவலரான கீதா வெர்மா இடம்பிடித்து, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் தாக்கும் கடுமையான வைரஸ் நோய்களான தட்டம்மை மற்றும் ரூபெல்லாவைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் கடந்த 2017, பிப்ரவரி மாதம் இந்தியா கைகோத்தது. அதன்படி, இந்தியா முழுவதும் இந்த நோய்த்தடுப்புக்காக தடுப்பூசிகள் போடுவது, விழிப்புஉணர்வுப் பிரசாரம் மேற்கொள்வது என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில், மன்டி மாவட்டத்தில் இந்த விழிப்பு உணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டவர்தான் சுகாதார அலுவலர் கீதா வெர்மா.

கீதா வெர்மா

மன்டி மாவட்டம், இமயமலைத் தொடரில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த மாவட்டம். பள்ளத்தாக்குகளும் மலைமுகடுகளுமான நிலப்பரப்பில், குளிர்காலத்தில் பனி மூடியிருப்பதும் இங்கே சகஜம். இத்தகைய சூழலில் இதில் பயணிப்பதே சவாலான காரியம். இந்த மாவட்டத்தில் தன் விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக மிகக் கடுமையாக தனி ஒருத்தியாகப் செயல்பட்டிருக்கிறார். வெகுதூரங்களுக்குத் தனது ஸ்கூட்டியின் மூலமாகவே தடுப்பூசி மருந்துகள் அடங்கிய பெட்டியையும் சுமந்தபடி பயணித்திருக்கிறார். ஸ்கூட்டியால் செல்ல முடியாத தூரங்களுக்கு நடந்தே சென்றிருக்கிறார்.

கீதா வெர்மா

ராய்கர் பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் மேய்க்கும் ஏழை எளிய மக்கள், அடிக்கடி மேய்ச்சல் நிலங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். கிராமங்களைவிட்டு தொலைவில் இருப்பதால், அவர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ வசதி கிடைப்பதே அரிது. அவர்கள் அனைவரையும் ஒரு சாகசப் பயணம்போலவே தேடிச் சென்று, தடுப்பூசிகளின் தேவையை விளக்கிப் புரியவைத்து, தடுப்பூசி போட்டிருக்கிறார். அதேபோல் தற்காலிக முகாம்களில் வசிக்கும் குர்ஜார் இன மக்களின் குழந்தைகளையும் தேடித் தேடிச் சென்று தடுப்பூசி போட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டபடி, ராய்கர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டு சாதித்திருக்கிறார். இவரது நேர்மையான, மனிதநேயச் செயல்பாடு போற்றுதலுக்குரியது. இவர், தடுப்பூசி மருந்துப்பெட்டியோடு கரடுமுரடான ராய்கர் பகுதியில் தனது ஸ்கூட்டியில் பயணிக்கும் படத்தையும், பனி படர்ந்த மலைப்பகுதிகளில் நடந்துசெல்லும் படத்தையும் வழக்கம்போல தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, அது பெரிய அளவில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தான் எடுத்துக்கொண்ட பணியைச் செம்மையாக முடிப்பதற்காக இவர் எடுத்துக்கொண்ட சிரத்தை, உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக்கும் சென்றது. எனவே, அவரது சேவையைப் பாராட்டும்விதமாக, 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தின் காலண்டரில் இவரின் புகைப்படத்தை இடம்பெறச்செய்தது.

கீதா வெர்மா

இந்தச் செய்தி, அந்த மாநில முதலமைச்சரான ஜெய்ராம் தாக்கூரின் கவனத்துக்குச் சென்றதும், அவருக்கு மிகுந்த பெருமையாகிவிட்டது. கீதா வெர்மாவின் தன்முனைப்பையும், பணி நேர்மையையும், மனிதாபிமானத்தையும் பாராட்டிப் பேசினார். ``இவரால் நம் மாநிலமே பெருமைகொள்கிறது. இவரைப் பார்த்து, நம் மாநிலத்தில் உள்ள மற்ற பணியாளர்களும் சிறப்பாகவும் சிரத்தையுடனும் செயல்பட வேண்டும். மருத்துவத் துறையில் இவரைப் போன்று சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் நல்ல உள்ளங்களால்தான் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இவரின் தன்னலமற்ற பணியை நான் மனதாரப் பாராட்டுகிறேன்'' என்றும் குறிப்பிட்டார்.

மிகவும் நேர்மையான மருத்துவ அலுவலருக்கு, அவரது பணிக்கான இத்தகைய பாராட்டைவிட வேறு என்ன வேண்டும்?


டிரெண்டிங் @ விகடன்