வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (22/01/2018)

கடைசி தொடர்பு:16:18 (22/01/2018)

 ``படையெடுக்கும் பயணிகள்... ரயில்களில் கூடுதல் கோச்! ஆசீர்வாதம் ஆச்சாரி தகவல்

ரயில்

தமிழகத்தில், பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வை அடுத்து, ரயில்களில் முன்பதிவுசெய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பிவழிகிறது. பதிவுசெய்யும் பெட்டிகளிலும் காத்திருப்போர் பட்டியல்  நீண்டுகொண்டே செல்கிறது. சென்னையில் ஓடும் புறநகர் மின்சார ரயில்களில், கடந்த சில தினங்களாகக் கூட்டம் அதிகரித்துள்ளது. அதுபோல, கன்னியாகுமரி, கோவை, திருச்சி ரயில்கள் என நீண்ட தூர ரயில்களிலும் வழக்கத்தைவிட அதிகப் பயணிகள் பயணிக்கின்றனர். எனவே, கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு வாரிய உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி கூறினார்.

இதுதொடர்பாக ஆசீர்வாதம் ஆச்சாரி இன்று  கூறுகையில், 'தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு, பொது மக்கள் ரயில் வண்டிகளை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். உயர்த்தப்பட்டுள்ள பஸ் கட்டணத்தோடு ஒப்பிடுகையில், ரயில் கட்டணம் சுமார் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைவாக உள்ளது. இதன் காரணமாக, அனைத்து ரயில்களிலும் கூடுதல் புக்கிங் ஆகிவருவதால், வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை சில ரயில் வண்டிகளுக்கு 100-க்கும் மேல் சென்றுவிட்டது.

இதன் காரணமாக, எந்தெந்த ரயில் வண்டிகளில் கூடுதல் கோச்சுக்களை இணைக்க முடியும் என்று சர்வே எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளைப் பணித்துள்ளேன். இயன்றவரை ஒவ்வொரு ரயில் வண்டியிலும் (அந்தந்த வண்டியின் திறனுக்கு உட்பட்டு) கூடுதலாக ஒரு கோச்சை இணைக்க ஏற்பாடுசெய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு இணைக்கப்படும் கூடுதல் கோச் மூலம், சுமார் 70 முதல் 100 பயணிகள் கூடுதலாகப் பயணிக்கலாம்.

திருச்சி டிவிஷனைப் பொறுத்தவரை, தஞ்சாவூர் - சென்னை உழவன் எக்ஸ்பிரஸ் வண்டியில் கூடுதலாக 2 கோச்சுகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பிற ரயில் வண்டிகளில் இணைக்க 15 கூடுதல் கோச்சுகள் தேவைப்படுகின்றன. மதுரை டிவிஷனைப் பொறுத்த வரை சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வண்டியிலும் 2 கோச்சுகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு கூடுதல் கோச்சுகளை இணைக்குமாறு தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பேருந்துக் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், தமிழக மக்களின் துயர்துடைக்க மோடி அரசு எந்த நேரமும் தயாராக உள்ளது' என்று கூறினார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க