வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (23/01/2018)

கடைசி தொடர்பு:16:24 (23/01/2018)

பா.ஜ.க-வுடனான 29 ஆண்டு கூட்டணியை முறித்தது சிவசேனா!

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கூட்டணியில் இருந்த பா.ஜ.க - சிவசேனா உறவு முறிந்துள்ளது. 

உத்தவ் தாக்கரே மற்றும் மோடி

அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விஷயம்குறித்து சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அவர், `2019-ம் ஆண்டு நடக்க உள்ள தேர்தல்களில் சிவசேனா எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடும். இதுகுறித்தான முடிவை கட்சியின் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில், சிவசேனா கட்சி தனித்துப் போட்டியிடும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 25 சீட்களையும், 288 சட்டமன்றத் தொகுதிகளில் 150 சீட்களையும் வெற்றிபெற கூட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தற்போது இணைந்து மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், சமீபத்தில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. மோடி குறித்தும், பா.ஜ.க-வின் பல்வேறு செயல்பாடுகள்குறித்து சிவசேனா கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.