மோடி அரசுக்கு எதிராகக் களத்தில் குதித்த ஆம் ஆத்மி கட்சியினர்!

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்.

ம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ-க்களை அதாவது ஸ்டேட் பார்லிமென்டரி - செக்ரட்டரி (State- Parliamentary Secretary) எனப்படும் மாநில- ஆட்சிமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு தகுதி நீக்கம் செய்துள்ளது. இதனை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையின் முன்பு இன்று(23-01-2018) காலை அக்கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பனகல் மாளிகையிலிருந்து பேரணியாகச் சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டமாகத்தான் முதலில் இந்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவலர்கள் அனுமதி அளிக்காததால் பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்.

இதைப்பற்றி அக்கட்சியின் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளரான வசீகரனிடம் பேசியபோது "டெல்லி முழுவதும் மக்கள் பணியை மிக துரிதமாகச் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 21 எம்.எல்.ஏ- க்களை நியமனம் செய்தது. அந்தப் பொறுப்புக்கு ஸ்டேட் பார்லிமென்டரி - செக்ரட்டரி (State- Parliamentary Secretary) என்று பெயர். இந்தப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேலை அதிகம். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது, அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவது போன்று மக்களுக்குப் பயன்படும் முக்கியப் பணிகளைச் செய்வதுதான் அவர்களுடைய வேலை. இந்தத் திட்டத்தை டெல்லியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்ல... குஜராத் - 8, சட்டீஸ்கர் - 11, ராஜஸ்தான் - 10, உத்தர்காண்ட் - 12, பஞ்சாப் - 4, அருணாச்சல பிரதேசம் - 26, ஹரியானா - 4, ஹிமாச்சல் பிரதேசம்  - 6, கர்நாடகம் - 10, மணிப்பூர்  - 12, மேகாலயா  - 18, மிசோரம் - 7, நாகாலாந்து  - 26, என 13 மாநிலங்களில் இருக்கும் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 174 பேர் செயல்படுத்துகிறார்கள் இவர்களுக்கெல்லாம் இந்தப் பொறுப்புக்கென தனி கார்கள், தனிச் சம்பளம், தனி அலுவலகம் என அனைத்தும் அந்தந்த அரசு செய்து வருகிறது. ஆனால் டெல்லியில் இயங்கிவரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு இந்தப் பொறுப்பில் இருப்பவர்களுக்கென்று தனியாக எந்தச் சலுகையும் வழங்காமல் மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே குறிக்கோளாகச் செயலாற்றி வருகிறது. அதனால், இந்த ஸ்டேட் பார்லிமென்டரி - செக்ரட்டரி நியமனத்தை அரசு ஆணையாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஆம் ஆத்மி அரசு. ஆனால், துணை நிலை ஆளுநர் மற்றும், குடியரசுத் தலைவர் ஆகியோர் இதை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டார்கள்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்.

ஆம் ஆத்மி அரசு எந்த நல்ல செயலையும் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடக் கூடாது என்று மத்தியில் ஆளும் மோடி அரசு நினைத்து வருகிறது. அதன் வெளிபாடாகத்தான் எங்கள் கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். தாங்களும் மக்களுக்கு நல்லது செய்யமாட்டார்கள் அடுத்தவர்களையும் நல்லது செய்ய விடமாட்டார்கள் என்பது பிரதமர் மோடியின் அரசுக்கு நிச்சயம் பொருந்தும். இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக வழக்கு தொடுத்திருக்கிறோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கத்துக்கு மக்களின் முன்னிலையில் பிரதமர் மோடியின் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். டெல்லியில் 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருகிறது. நடப்பதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மோடி அரசை எதிர்த்தும் சென்னை பனகல் மாளிகையிலிருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணியாகச் சென்று பின்னர் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் செய்ய நினைத்திருந்தோம். ஆனால், தமிழக காவல்துறை எங்கள் போராட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் எங்களைக் கைது செய்துவிட்டார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!